தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் மாத்திரம் கொரோனா வைரஸ் பாதிப்பால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் நேற்று 1,515 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 1,454 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,782ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 19,242 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 7,48,244 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட 1,515 பேரில் 919 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே ஒட்டுமொத்தமாக சென்னையில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,245 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்த 528 பேரில் 422 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். திருவள்ளூரிலும் செங்கல்பட்டிலும் தலா 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று உயிரிழந்த 49 பேரில் 3 பேர் வேறு எவ்வித உடல்நல பிரச்சனைகளும் இல்லாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.