தேர்தலை நடத்துவதற்காக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு பல மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கி சுதந்திரமான மற்றும் சாதாரண தேர்தல் நடத்துவதற்கு அவசியமான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றிற்கு மத்தியில் தேர்தல் நடத்துவதற்கு அவசியமான சுகாதார பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலுக்கு மத்தியில் முதல் முறையாக தேர்தல் ஒன்று இடம்பெறும் சந்தர்ப்பம் இதுவாகும்.
தேர்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் முழுமையாக ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமை தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன், எவ்வித சுகாதார பிரச்சினைகளும் இன்றி தேர்தலில் முகம் கொடுக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.