முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக பௌத்த சங்க கட்டளை பிறப்பிக்கப்பட வேண்டும் என இரத்மலானை பௌத்த தர்ம ஆய்வு நிலையத்தின் தலைவர் ஹெகொட விபஸ்ஷி தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவு குறித்து சிங்கள வலையெளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் சிறுவர்கள் பௌத்த துறவிகளாக துறவரம் பூணப்படுவது தலிபான் அமைப்பினர் சிறுமிகளை மணமகள்களாக மாற்றுவது மற்றும் சிறுவர்களை ஆயுதக்குழுக்கள் போராளிகளாக மாற்றுவது போன்ற மிக மோசமான செயல் என மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுடன் இது சிறுவர்களின் மனித உரிமைகளை மீறும் செயல் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள விபஸ்ஷி தேரர், இலங்கையின் தேராவாத பௌத்த சமயத்தை மாத்திரமல்லாது பௌத்த சங்க சபையினரை தலிபான்களுடன் ஒப்பிட்டு முன்வைத்துள்ள பாரதூரமான கருத்துக்கு எதிராக பௌத்த பீடங்களின் மாநாயக்கர்கள் மட்டுமல்லாது முழு பௌத்த பிக்குகளும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் மங்கள சமரவீரவுக்கு எதிராக பௌத்த சங்க கட்டளையை பிறப்பித்து அவரை பௌத்த மதத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.