சர்ச்சைக்குரிய மத்திய வங்கி முறிகள் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சவால் விடுத்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அதன் அறிக்கையில் முறைகேட்டில் ஈடுபட்ட தனிநபர்கள் பற்றிய விரிவான தகவல்களைத் தெரிவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மத்திய வங்கி அதிகாரிகள் மீது இரு தினங்களுக்கு முன்னர் கோட்டாபய கடுமையாக சாடினார். மத்திய வங்கி நிதி அமைச்சின் கீழ் வருகின்றது, அதற்கு ஒரு பொறுப்பு உள்ளது. மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலாக இன்று மத்திய வங்கியின் அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது என்றும் வசந்த சமரசிங்க அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
மேலும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளை ஆராய கடந்த காலத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு அதில் பலர் சாட்சியங்களை வழங்கியுள்ளனர். எனவே குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறும் அவர் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார்.
தற்போது மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய வசந்த சமரசிங்க, அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்காளர்கள் தொடர்பாக பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.