இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் இருதரப்புக்கும் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த சம்பவங்கள் தொடர்பில் முழு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியவின் லடாக்கில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்குப் பகுதியில் இந்திய- சீன ரோந்துப்படை வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கடும் மோதல் ஏற்பட்டது.
சுமார் 250 வீரர்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக் கொண்டனர்.
இந்திய வீரர்கள் மீது ஆணிகளால் அடிக்கப்பட்ட கம்புகளைக் கொண்டு சீன வீரர்கள் தாக்கினர். இதில் இருதரப்பிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மே 9 ஆம் திகதி இந்த மோதல், கிழக்குப் பகுதிக்கும் பரவியது. சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள நாகு லா பகுதியில் சுமார் 150 வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 4 பேரும், சீன வீரர்கள் 7 பேரும் காயமடைந்தனர்.
நாகு லா பகுதியில் ஏற்பட்ட மோதலை உறுதிப்படுத்தி மே 10-ல் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டதாக மே 12-ல் செய்திகளும் வெளியாகின.
ஒரு வாரத்துக்குப் பிறகு மே 19-ல் பாங்கோங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பதற்றம் குறைந்தது. சீன வீரர்களின் ரோந்துப் பணிகளை இந்திய ராணுவம் தடுத்ததாக சீன வெளிவிவகார அமைச்சகம் குற்றச்சாட்டியது.
சீனாவின் கருத்துக்கு மே 21-ல் இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எல்லையில், இந்தியப் பகுதியிலேயே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டதாகவும், இதற்கு சீனா தடையை ஏற்படுத்தியதாகவும் வெளிவிவகார அமைச்சகம் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், லே பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையின் தலைமையகத்தை ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே மே 22-ல் ஆய்வுசெய்தார். இருதரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டது.
லடாக் பிராந்தியத்தில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லையில் சுமார் 5 ஆயிரம் வீரர்களை சீனா மே 25-ல் நிறுத்தியது.
இதேபோல, இந்தியாவும் ராணுவத்தை அனுப்பிவைத்தது. எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ராணுவ உயர்அதிகாரிகள் மே 27-ல் ஆலோசனை நடத்தினர்.
பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகளும் தூதரக மற்றும் ராணுவ ரீதியில் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மே 30-ல் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
இந்தியாவின் கவுரவம் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
எல்லைப் பகுதியில் வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளதாக ஜூன் 2-ல் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புக் கொண்டார். சீனாவின் நடவடிக்கைக்கு ஏற்ப இந்திய ராணுவப் படையும் நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
பதற்றத்தை தணிப்பது குறித்து இருதரப்பு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 6-ல் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மூன்று நிலைகளிலிருந்து படைகளை சீனா திரும்பப் பெற்றுக் கொண்டதாக ஜூன் 9-ல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, இந்தியப் படைகளும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறினர்.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மேஜர் ஜெனரல் மட்டத்திலான இருதரப்பு ராணுவ உயர்அதிகாரிகள் ஜூன் 10-ல் ஆலோசனை நடத்தினர்.
4-வது கட்டமாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிலைமை மேலும் சீரடைந்தது. ஜூன் 12-ல் இருதரப்புக்கும் இடையே 5-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
எல்லைப் பகுதியில் இரு நாட்டு படையினரும் படிப்படியாக திரும்பப் பெறப்படுவார்கள் என்று ஜூன் 13-ல் ராணுவத் தளபதி உறுதியளித்தார்.
ஜூன் 15 ஆம் திகதி மாலை இருதரப்பு ராணுவ உயர்அதிகாரிகள் ஆலோசனை இருவேறு இடங்களில் நடைபெற்றது.
பிரிகேடியர் மட்டத்திலான அதிகாரிகள் ஆலோசனை கல்வான் பகுதியிலும், கர்னல் மட்டத்திலான அதிகாரிகள் ஆலோசனை ஹாட்ஸ்பிரிங் பகுதியிலும் நடைபெற்றன.
இவ்வாறு பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15-ம் திகதி இரவு படைகளை திரும்பப் பெறும்போது மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 35 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தங்கள் தரப்பு உயிரிழப்பை சீனா இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.