பௌத்த மதத்தையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாத்தல் என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் உடமையாக்கப்படும் நிலப்பரப்பில் சிங்களவர்களைக் குடியமர்த்தி அதனூடாக கிழக்கு மாகாணத்தையும், இயலுமானவரையில் வடக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களாக மாற்றியமைத்து, இருமாகாணங்களுக்கும் இடையிலான மொழி ரீதியான தொடர்ச்சியை இல்லாமல் செய்வதே புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியின் நோக்கமாகும் எனக் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் நீண்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“2020 ஜுன் மாதம் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2178/17 என்ற இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக நிறுவப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி தொடர்பிலேயே கருத்து வெளியிட முன்பாக, நான் சில அவதானிப்புக்களைப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
முதலாவதாக இலங்கை பல்லின, பன்மொழி, பல மத, பல்கலாசாரம் கொண்ட ஒரு பன்முக நாடாகும். இரண்டாவதாக இலங்கை 9 மாகாணங்களை உள்ளடக்கியிருப்பதுடன், அவற்றில் ஒன்றே கிழக்கு மாகாணமாகும்.
மூன்றாவதாக கிழக்கு மாகாணம் பல்லினத்தவர் வாழும் மாகாணமாக இருப்பினும் கூட, அங்கு தமிழ்மொழி பேசுபவர்களே பெரும்பான்மையானவர்களாவர்.
நான்காவதாக தற்போது நிறுவப்பட்டுள்ள செயலணியின் உறுப்பினர்கள் அனைவரும் சிங்களவர்களாவர். அதனூடாக இந்த நாட்டின் பெரும்பான்மையாக விளங்கும் சிங்கள பௌத்த சமூகத்தவரின் நலன்களை மாத்திரமே இது கவனத்தில் கொண்டிருக்கிறது என்பது தெளிவாக வெளிப்படுகின்றது.
ஐந்தாவதாக ஏன் ஏனைய மாகாணங்கள் விடுபட்டிருக்கின்றன? ஏன் ஏனைய மதங்கள் விடுபட்டிருக்கின்றன? என்ற முக்கிய கேள்வியையும் இது ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழ் இந்து மக்கள் தமது வேர்களை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் பதிக்கவில்லை. மாறாக இந்த நாடு முழுவதும் வாழ்கிறார்கள் என்பதால் ஓர் இலங்கைத் தமிழன் என்ற வகையிலும், இந்து என்ற வகையிலும் இவ்விடயத்தில் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறேன்.
இலங்கையின் சிறந்த வரலாற்றாசிரியர்களின் ஒருவரான பி.ஈ.பீரிஸ் அவரது வரலாற்று ஆய்வுகளின் பிரகாரம், விஜயனின் வருகைக்கு முன்பே இலங்கையில் சிவனுக்கான ஐந்து ஈஸ்வரங்கள் காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.
திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகியவையே அவையாகும். இவற்றில் இரண்டு வடமாகாணத்திலும், ஒன்று கிழக்கு மாகாணத்திலும், ஒன்று மேல்மாகாணத்திலும், ஒன்று தென்மாகாணத்திலும் அமைந்திருக்கின்றன.
பீரிஸின் கருத்தின் பிரகாரம் இலங்கையில் விஜயனின் வருகைக்கு நீண்டகாலத்திற்கு முன்பே இந்த ஐந்து ஈஸ்வரங்களும் காணப்பட்டிருக்கின்றன என்பது மிகவும் முக்கியமானதாகும். விஜயனே இலங்கையில் சிங்கள மரபின் முன்னோடியாகக் கருதப்படுகின்றார்.
இவற்றில் திருக்கோணேஸ்வரம் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைந்திருக்கிறது. இதன் சிறப்புக்கள் பற்றி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியரின் குறிப்புக்களில் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வருகைதந்த அப்போதைய இந்தியப் பிரதமரின் பெரும் பாராட்டையும் பெற்றது.
மேலும் தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுடன் தொடர்புடைய சில தகவல்களைக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளடங்கிய கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையானோர் சிங்கள மொழியைப் பேசும் பகுதிகளாக மாற்றுவதற்குக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது நன்கறிந்த விடயமாகும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்கள் என்ற ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன.
1987 இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் தமிழ்பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இவ்விரு மாகாணங்களையும் இணைத்தல் பற்றிக் குறிப்பிடப்பட்ட போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமிழ்பேசும் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்ற உண்மையை மழுங்கடிப்பதற்குத் தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனினும் தமிழ் மக்களின் உறுதியான எதிர்ப்பின் ஊடாக இம்முயற்சிகளை ஓரளவிற்குத் தடுக்க முடிந்திருக்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் இந்துக்கள் வணங்கும் ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. குறிப்பாக தெற்கில் கதிர்காமம், தொண்டேஸ்வரம் மற்றும் மேற்கில் முன்னேஸ்வரம் ஆகியவற்றைக் குறிப்பிட முடியும்.
இவற்றில் தொண்டேஸ்வரம் தற்போது சிதைவடைந்து வருவதாகக் கூறப்பட்டும் கூட, தொல்பொருள் திணைக்களம் அதனை சீரமைத்துப் பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது ஏன்?
இவைபோன்று நாடளாவிய ரீதியில் இந்துக்கள் பாரம்பரியமாக வழிபடும் பல்வேறு ஆலயங்கள் உள்ளன. தொல்பொருள் திணைக்களம் ஒரு மதத்தை மாத்திரமே முன்நிறுத்துகின்றது என்றும், ஏனைய மதங்களின் நியாயமான நலன்களுக்குத் தீங்காக செயற்படுகிறது என்ற பெயரைப் பெற்றுக்கொண்டுவிட்டது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் கல்வெட்டுக்களுடன் கூடிய பௌத்த கோவில்கள் இருக்கின்றன. தமிழ்க் கட்வெட்டுக்களுடன் சிதைவடைந்த பௌத்த விகாரைகள் உள்ளன.
இவையனைத்தும் முற்பட்ட காலத்தில் தமிழ் இந்துக்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதையே காண்பிக்கின்றன. புத்தர் ஒருபோதும் இந்துமதத்தை எதிர்க்கவில்லை.
தொல்பொருள் திணைக்களம் இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தவறியமைக்கான காரணம் என்ன? புத்தரின் பெயரால் தற்போது சிலர் போதிக்கின்ற கடும்போக்குவாதக் கொள்கைகளை உண்மையில் அவர் பின்பற்றவில்லை.
கௌதம புத்தரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்கள் உண்மையில் அவரது போதனைகளைப் பின்பற்றுவார்களாயின் இலங்கை அமைதியின் இருப்பிடமாக மாறும்.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு எவ்வளவு நிலப்பரப்பு தேவை என்பதை அடையாளங்கண்டு, அதனை தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்துடையதாக்குவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகயை எடுப்பது தற்போது நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களில் ஒன்றாக இருக்கின்றது.
இதன்படி நோக்குகையில் பௌத்த மதத்தையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாத்தல் என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் உடமையாக்கப்படும் நிலப்பரப்பில் சிங்களவர்களைக் குடியமர்த்தி அதனூடாக கிழக்கு மாகாணத்தையும், இயலுமானவரையில் வடக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களாக மாற்றியமைத்து, இருமாகாணங்களுக்கும் இடையிலான மொழி ரீதியான தொடர்ச்சியை இல்லாமல் செய்வதே இந்தச் செயலணியின் மூலமாக அரசு அடைந்துகொள்ள எதிர்பார்க்கின்றது.
புதிதாக எந்தவொரு காணிகளையும் கையகப்படுத்தாமல் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்பதுடன், அதுவே மக்கள் மத்தியில் அமைதியையும், நல்லெண்ணத்தையும் பேணுவதற்கான ஒரே வழியுமாகும்” – என்றுள்ளது.