ஈரானில் இளம்பெண் ஒருவர் அவரது தந்தையால் அடித்தே கொல்லப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் மூவர் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் கெர்மனைச் சேர்ந்த 22 வயது ரெய்ஹானே அமெரி என்பவர், முந்தைய நாள் மாலை தாமதாக வீட்டிற்கு வந்த காரணத்தால் சொந்த தந்தையால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிறகு கிட்டத்தட்ட 24 மணிநேரம் அவர் உயிர் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் அவரது காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடத்தை சரியில்லை எனக் கூறி தமது 19 வயதேயான இளம் மனைவியை கணவர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதேப்போன்று 13 வயது சிறுமி ஒருவரும் சொந்த தந்தையால் வாள்வெட்டுக்கு பலியானார்.
ரெய்ஹானே ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்ததாக நம்பப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த அவரது தந்தை காரணம் கேட்டு துன்புறுத்தியுள்ளார். மட்டுமின்றி இரும்புக் கம்பியால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ரெய்ஹானே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். தொடர்ந்து குற்றுயிராக இருந்த மகளை தமது காரில் எடுத்துச் சென்று நகருக்கு வெளியே மறைவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரியவந்து, அவரை கைது செய்துள்ளனர். ஆனால் தமது மகள் தொடர்பில் தமக்கு தகவல் ஏதும் தெரியாது என கூறி வந்த அவர் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொலிசார் விரைந்து சென்று ரெய்ஹானாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் அடுத்த இரண்டு மணி நேரம் மட்டுமே ரெய்ஹானா உயிருடன் இருந்துள்ளார்.