நடைபெறவுள்ள தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் எமக்கு தேவையில்லை என்று தான் சொல்லவில்லையென்றும், முஸ்லிம்கள் விரும்பினால் எம்முடன் இணைந்து எமது பங்காளிகள் ஆகலாம் என அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக தெரிவித்திருக்கும் கருத்தை உலமா கட்சி வரவேற்றுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
அண்மைக்காலமாக ஊடகங்களில் அதுவும், சமூக வலைத்தலயங்களில் செய்திகளை இட்டுக்கட்டி உண்மை போன்று வெளிவருவதை பரவலாக காண்கிறோம். அதுவும் முஸ்லிம்கள் மத்தியிலேயே இவ்வாறான பொய் பிரச்சாரம் பரவுகிறது.
முஸ்லிம்களுக்கு பிடித்த கட்சியினர் எவ்வளவு தான் இனவாதம் பேசினாலும் அதனை பொருட்படுத்தாமலும் முஸ்லிம்களுக்கு பிடிக்காத கட்சியினர் சொல்லாததை இட்டுக்கட்டுவதையும் அடிக்கடி காண்கிறோம்.
ஒரு செய்தியை கேள்விப்பட்டால் அது உண்மையா என அறியாமல் பரப்ப வேண்டாமென்ற இஸ்லாத்தின் போதனையை மறந்த நிலையை காண்கிறோம். செய்திகள் விடயத்தில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர் என இஸ்லாம் பிரித்துப்பார்க்கவில்லை. யாராக இருந்தாலும் அவர் பற்றிய பொய் செய்தியை பரப்ப கூடாது.
முஸ்லிம்களின் வாக்குகள் எமக்கு தேவையில்லை என அமைச்சர் வீரவன்ச தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி பொய் என்றும், அவ்வாறு நான் பேசியிருந்தால் அதன் குரல் பதிவை வெளியிடுங்கள் எனவும் அமைச்சர் வீரவன்ச பகிரங்கமாக பேசி மறுத்துள்ளதன் மூலம் அவர் இவ்வாறு பேசவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
அத்துடன் முஸ்லிம்கள் எமக்கு இந்த தேர்தலில் வாக்களித்து எமது பங்காளிகளாகலாம் என்ற அவரது கருத்து அவர் முஸ்லிம்கள் பற்றி நல்லெண்ணம் கொண்டுள்ளார் என்பதுடன், இக்கருத்து பெரிதும் வரவேற்கப்படக்கூடியதாகவே நாம் காண்கிறோம்.
இந்த நாட்டின் சிங்கள மக்களில் பெரும்பாலான சிங்கள மக்கள் நேசிக்கும் சிங்கள தலைவர்களுடன், வெறுமனே முஸ்லிம் சமூகம் வெறுப்புக்களை கொட்டுவதை விடுத்து வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் சிங்கள பெரும்பான்மையுடன் இணக்க அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனவும் உலமா கட்சித்தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.