நான் கொரோனாவை விட பயங்கரமானவன் என ஒருவர் கூறியிருக்கிறார். அது உண்மைதான். கொரோனாவினால் உயிரிழந்தவர்களை விட, என்னால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம்“ என கூறியுள்ளார் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா).
அம்பாறை, நாவிதன்வெளியில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டமான்றில் இதனை தெரிவித்துள்ளார்.
பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் அண்மையில் நடந்த கூட்டமொன்றில் கருணா கொரோனாவை விட ஆபத்தானவர் என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்து உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார்
“நான் கொரோனாவை விட ஆபத்தானவன் என்று பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் கூறியுள்ளார். ஆம், நான் கொரோனாவை விட ஆபத்தானவன். நான் விடுதலைப் புலியில் இருந்தபோது, கிளிநொச்சியிலுள்ள ஆனையிறவு முகாமில் 2,000 முதல் 3000 இராணுவத்தை கொன்றேன். இலஙகையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்“ என்றார்.
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாகவும், தேசியப் பட்டியல் ஊடாக தெரிவாவதனை விடவும் தாம் மக்களின் ஆணையின் அடிப்படையில் நாடாளுமன்றம் செல்லவே விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.