ஒரே நாளில் 54,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் ஒரு மில்லியன் கடந்த இரண்டாவது நாடாக பிரேசில் மாறியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தொடர்ச்சியாக 4-வது நாளாக இறப்பு எண்ணிக்கை 1,200-ஐ கடந்துள்ளது. இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 49,000-ஐ தொட்டுள்ளது.
கடந்த மே 3 அன்று முதல் முறையாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 100,00 தாண்டிய பின்னர் கடந்த மாதத்தில் பிரேசிலில் நோய்த்தொற்றுகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளன.
சில வல்லுநர்கள், பிரேசிலின் கொரோனா சோதனைகள் தொடர்பான பின்னடைவு மற்றும் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் உண்மையான தொற்று எண்ணிக்கை பத்து மில்லியனாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 27 அன்று ஒரு மில்லியன் கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன் முதல் நாடாக அமெரிக்கா அறியப்பட்டது. கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பாதிப்புகளுடன் அமெரிக்கா தற்போதும் முதல் வரிசையில் உள்ளது.
576,952 பாதிக்கப்பட்டவர்களுடன் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது, இந்தியா 396,661 ஆகவும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் 301,815 ஆகவும் உள்ளது.
211 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரேசில் அடுத்த சில வாரங்களில் குளிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறது.

கொரோனா பரவலை பொறுத்தமட்டில் குளிர் காலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை நிறுவப்பட்ட ஒன்று.
இதனால் உலக சுகாதார அமைப்பு பிரேசில் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் இத்தனை உயிரிழப்புகளை சந்தித்த பின்னரும் பிரேசில் ஜனாதிபதி போல்சொனாரோ கொரோனாவை வெறும் காய்ச்சல் என்றே கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



















