முகமாலை காரைக்காடு குளப்பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் இராணுவச்சிப்பாயை தள்ளிவிழுத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக முன்னர் பாதுகாப்பு தரப்பு குறிப்பிட்டிருந்தது.
இராணுவச்சிப்பாயின் துப்பாக்கியை பறிக்க முயன்றபோதே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தற்போது பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காடு குளப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடந்து வருகிறது. இதையடுத்து அங்கு அண்மைக்காலமாக சிறிய காவலரண் அமைத்து இராணுவத்தினர் காவல்கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று மாலை உழவு இயந்திரத்தில் வந்த 4 பேர் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த திரவியம் இராமகிருஷ்ணன் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
சட்டவிரோதமாக மணல் அள்ளியவர்களை இராணுவத்தினர் மடக்கிப்பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பிச்சென்றனர்.
“மோட்டார் சைக்கிளில் வந்த இராமகிருஷ்ணனம் தப்பிச் சென்றுள்ளார். இதன்போது சிப்பாயொருவர் அவரை பிடிக்க முயன்றபோது, அவரை தள்ளிவிட்டு தப்பி செல்ல முயற்சித்தார். இதன்போது சிப்பாய் அவரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்“ என இராணுவத்தினர் தெரிவித்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவத்தினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற 4 பேரும் சிறிது நேரத்தில் கைதாகியுள்ளனர்.
தப்பிச்சென்ற இராமகிருஷ்ணன் பயணித்த மோட்டார் சைக்கிளிலும் துப்பாக்கிச்சூடு பட்டுள்ளது. தலை மற்றும் வலது தோள்மூட்டில் இராமகிருஷ்ணனிற்கு துப்பாக்கிச்சூடு பட்டுள்ளது. அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தாரா அல்லது சிறிது நேரத்தில் உயிரிழந்தாரா என்பதில் தெளிவற்ற தன்மை நீடிக்கிறது.
துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான இளைஞனின் உடலை, உழவு இயந்திர பெட்டிக்குள் இராணுவத்தினரே தூக்கிப் போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச்சென்ற நால்வரில் ஒருவர்- இராணுவத்திடம் சிக்குவதற்கு முன்னதாக- பிரதேசவாசிகளிற்கு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்றனர். உழவு இயந்திர பெட்டிக்குள் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் இருந்த இராமகிருஷ்ணனின் உடலை மீட்டு, முச்சக்கர வண்டியொன்றில் பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர்.
இந்த சமயத்தில் இராணுவத்தினர் மகேந்திரா வாகனத்தில் வைத்தியசாலைக்கு வந்தனர். முச்சக்கர வண்டி வைத்தியசாலையை அடைவதற்கு முன்னரே, இராணுவத்தின் வாகனம் வைத்தியசாலையை அடைந்து விட்டது.
இளைஞன் காயமடைந்த நிலையில், உடனடியாக இராணுவத்தினரே அவரை வைத்தியசாலைக்கு அனுப்பியிருந்தால், அனர்த்தத்தை தவிர்த்திருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மாலை 4.30 அளவில் இளைஞனின் உடல் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. எனினும், அங்கு வைத்தியர்கள் கடமையில் இருக்கவில்லை. சுமார் ஒரு மணிததியாலம் வைத்தியர்கள் இருக்கவில்லை.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும்போதே, இராமகிருஸ்ணன் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
இளைஞன் உயிரிழந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பளை வைத்தியசாலையின் முன்பாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
இதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.புஸ்பகுமார சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுக்களில் ஈடுபட்டார். இராணுவத்தினரால் கைதான 4 இளைஞர்களையும் விடுவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இராணுவத்தினரால் கைதான 4 இளைஞர்களையும் நேரில் சென்று பார்வையிட்டார். போராட்டக்காரர்களிற்கு வீடியோ அழைப்பை ஏற்படுத்தி, அவர்களை காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
கைதான இளைஞர்கள், இராணுவத்தினர் கிளிநொச்சி பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
இதன்மூலம் பொலிசார் தயாரித்துள்ள அறிக்கையில், கண்ணிவெடி அபாயமுள்ள பகுதியில் மணல் அகழ சென்றார்கள் என்றும், அவர்களை இராணுவத்தினர் தடுக்க முயன்றபோது ஏற்பட்ட முரண்பாட்டில், இராணுவத்தினரின் துப்பாக்கியை பறிக்க முயன்றபோது, சிப்பாய் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராமகிருஷ்ணன் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது



















