விஜயன் இலங்கைக்கு வந்து குவேனியை மணம் முடித்து பின்னர் அவளை விடுத்து பாண்டிய இளவரசியரைத் திருமணம் முடித்ததன் காரணமாக தமிழ் மொழியும், வடமொழியும் சேர்ந்து உருவாகியதே சிங்கள மொழி. இந்த வரலாறுகள் எல்லாம் எங்களது பழைய பாடப் புத்தகங்களிலே இருந்தது. அவற்றை முற்றாக மறைத்து விட்டார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ர்ஞனசார தேரரின் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாற தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஞானசார தேரர் இந்த நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட ஏனைய இனத்தவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்குச் சொந்தம் அல்ல என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விடயத்தை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றோம். வரலாறு தெரியாத விதத்திலே வரலாற்றைப் பொய்யாக்குகின்ற விதத்திலே இந்த விடயம் சொல்லப்படுகின்றது.
வரலாற்றின் அடிப்படையிலே நாங்கள் விஜயன் வருவதற்கு முன்பே இங்கு இருந்தவர்கள். லெமோரியாக் கண்ட வரலாற்றின் அடிப்படையில் ஆதிக்குடிகள் நாங்கள். மிக அண்மைய ஆராய்ச்சிகளின் படி கதிரவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமடக்கட் தாழிகள் புத்தபெருமான் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே நாகர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றைச் சொல்லுகின்றது. எங்களது ஆதிக்குடிகள் நாகர்கள். இதனடிப்படையில் எந்தவகையிலும் தமிழர்கள் இந்த நாட்டுக்கு அந்நியப்பட்டவர்கள் அல்ல.
விஜயன் வந்து குவேனியை மணம் முடித்து பின்னர் அவளை விடுத்து பாண்டிய இளவரசியரைத் திருமணம் முடித்ததன் காரணமாக தமிழ் மொழியும், வடமொழியும் கலந்து உருவாகியது தான் சிங்கள மொழி. இந்த வரலாறுகள் எல்லாம் எங்களது பழைய பாடப் புத்தகங்களிலே இருந்தது. அவற்றை முற்றாக மறைத்து விட்டார்கள். தமிழ் மொழியும், வடமொழியும் சேர்ந்து உருவாகிய சிங்கள மொழியைப் பேசுகின்றவர்கள் இது தங்களுக்கு மட்டும் சொந்தமான நாடு என்று சொல்வது மிகவும் அபத்தமானது. அந்த வகையிலே தொல்பொருளுக்காக கிழக்கில் அமைக்கப்பட்ட செயலணியை நாங்கள் முற்றாகக் கண்டிக்கின்றோம்.
எமக்கு எதிரணியில் இருந்து எம்மை விமர்சிக்கின்ற, கிழக்கை மீட்கப் போகின்ற அன்பர்களே, உங்களால் இந்தச் செயலணியை எதிர்த்து கருத்து வெளியிட முடியுமா? ஞானசார தேரரின் கருத்து தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன? இவற்றை எங்களுடைய மக்களுக்கு நீங்களே சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.