ஐக்கிய தேசியக்கட்சி யானையின் தும்பிக்கையில் தாமரை மொட்டை ஏந்தியிருக்கும் கட்சி என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று தேசிய மக்கள் சபை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடும் அந்த கட்சியை சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியில் இணைய திட்டமிட்டுள்ளனர் எனவும் சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேவேளை 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சமீர பெரேரா,
ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டையை காட்டிக்கொடுத்ததாக, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள பிரபலமான சில வீரர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் நடக்கும் ஊழல், மோசடிகளை எதிர்ப்பதாலும், ஹோமாகமை பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதன் காரணமாகவுமே மகிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.



















