“முகமாலையில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இராணுவத்தின் விசாரணையும் பொலிஸ் விசாரணையும் நடக்கின்றன.
எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் இப்போது எதுவுமே கூற முடியாது.”
இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க இது தொடர்பில் குறிப்பிடுகையில்,
“நாட்டில் சட்டவிரோத செயல்களைப் படையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்றபோது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிக்சூடு உடலின் எந்தப் பகுதியைப் பதம் பார்த்தது என்று எனக்குத் தெரியாது.
அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்ற தகவல்தான் எமக்குத் தெரியும். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது” என்றார்.
முகமாலை காரைக்காடு குளப் பகுதியில் இராணுவத்தினர் நேற்று முன்தினம் மாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கெற்பேலியைச் சேர்ந்த திரவியம் இராமகிருஷ்ணன் (வயது – 24) என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















