அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள நிலையில் நியூஜோர்க்கில் நடைபெற்ற ஆரம்பகட்ட தேர்தலில் ஜோ பிடன் அபாரமாக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனுக்கு நியூஜோர்க்கில் வலுவான ஆதரவு காணப்படுவதாகவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயகக் கட்சியில் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான போட்டியில் பலர் இருந்தனர். இறுதியில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், செனட் எம்.பியான பெர்னி சான்டர்ஸ் போட்டியில் இருந்தனர்.
தற்போது சான்டர்சும் ஆதரவு தெரிவித்து தேர்தலில் இருந்து விலகி கொண்டுள்ளார். கட்சி வேட்பாளராவதற்கு தேவையான ஆதரவு பிடனுக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது.
இதேவேளை கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்போது ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
பிடனுக்கு தேர்தல் நிதி திரட்டும் மாநாட்டுக்கு முன்னதாகவே 1.75 லட்சம் பேரிடம் இருந்து 57.50 கோடி ரூபாயை ஒபாமா திரட்டியுள்ளார்.
இது மக்களிடம் அவருக்கு உள்ள மதிப்பு மற்றும் செல்வாக்கை உணர்த்துவதாக உள்ளதென ஜோ பிடன் தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் பங்கேற்ற தேர்தல் பிரசார பேரணிகளில் மக்கள் கூட்டம் அதிகம் வராததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.