தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிரட்டல்களுக்கு அரசு ஒருபோதும் அடிபணியாது. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது. அதை மீறித் தலையிட வெளிநாடுகளுக்கு இந்த அரசு அனுமதி வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கிழக்கு தொல்பொருள் ஜனாதிபதி செயலணி தொடர்பில் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
என்ன பிரச்சினைக்கும் இலங்கை அரசு தீர்வு தராது; சர்வதேசம்தான் தீர்வு தரும் என்று கூறி மக்களை ஏமாற்றுவதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இயல்பு. இப்போது தேர்தல் காலம் என்றபடியால் அவர்களின் பசப்பு வார்த்தைகள் அதிகமாக இருக்கும்.
இந்தப் பசப்பு வார்த்தைகள் மூலமும், பொய்யான வாக்குறுதிகள் மூலமும், பொய்யான பரப்புரைகள் மூலமும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சுருட்டுவதில் கூட்டமைப்பினர் மும்முரமாக இருக்கின்றனர்.
எனவே, இந்தப் பசப்பு வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. சந்தேகங்கள் இருந்தால் – பிரச்சினைகள் இருந்தால் அரசுடன்தான் பேச வேண்டும்.
அதைவிடுத்து வெளிநாடுகள், சர்வதேச அமைப்புகள் தலையிடும் என்று நம்புவதில் பயனில்லை.
நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவின மக்களும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற தூய எண்ணத்துடன்தான் ஜனாதிபதி பணியாற்றுகின்றார் என்று கூறியுள்ளார்.


















