ஸ்ரீலங்காவின் மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz கூறியுள்ளார்.
மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் LNG எரிவாயு மின்னுற்பத்தி உள்ளிட்ட மின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை வழங்க தூதுவர் இணக்கம் தெரிவித்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது கூறியுள்ளார்.
உமா ஓயா, மன்னார் காற்றாலை மின் திட்டம், பிராட்லேண்ட் மற்றும் யாழ். சூரியகல மின் திட்டங்கள் என்பன இந்த வருட இறுதிக்குள் திறக்கப்படுமென அமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz உறுதியளித்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.