கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள் தற்போது நம்பிக்கை இழந்து வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு எம்.சீ.சீ. உடன்படிக்கை பிரதான காரணியாக அமைந்திருந்தது.
எம்.சீ.சீ. உட்பட நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை நிராகரிப்பதாக கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதியை நாட்டில் வாழும் பெரும்பான்மையான மக்கள் நம்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள் தற்போது நம்பிக்கை இழந்து வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் திசை நோக்கி வழியமைத்து வருகிறது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் முன்னர் அது சம்பந்தமான சில பணிகளை அமெரிக்க தூதரகம் ஆரம்பித்துள்ளது.
இதனால், தொடர்ந்தும் பொய்யான வார்த்தைகளை பயன்படுத்தாது, தேர்தல் வெற்றிக்கான கோஷமாக பயன்படுத்தாது, எம்.சீ.சீ உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா இல்லையா என்பது சம்பந்தமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச நேரடியாக தெரிவிக்க வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.