“நாட்டின் அடிப்படைவாதிகள், இனவாதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முஸ்லிம் கட்சியினரின் ஆதரவு இல்லாமல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்றத்தில் நிலையான அரசை ஸ்தாபிப்பதற்கு சிங்கள மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.”
இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் புதிய ஹெல உறுமய அமைப்பின் உப தலைவர் மதுமாதவ அரவிந்த.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வப் பெற்றுக்கொடுப்பதாக அiமையும். சிங்களத் தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற நோக்கம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக நிறைவேறியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவு வழங்கவில்லை. இருப்பினும் ஜனாதிபதி அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகச் செயற்படுகின்றார்.
அடிப்படைவாதிகளும், இனவாதிகளுமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரநிதிகள் கடந்த அரசில் அதிகாரம் செலுத்தினார்கள்.
ஒரு தரப்பினரது சுயநல செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த மக்களும் கடந்த காலங்களில் பல நெருக்கடிக்குள்ளானார்கள். இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படக் கூடாது.
நாட்டைப் பிரிக்கும் எண்ணம் கொண்டவர்களும், அடிப்படைவாதப் போக்கை உடையவர்களும் புதிய அரசில் ஆதிக்கம் செலுத்தகேகூடாது.
ஆகவே, இனவாதிகளின் ஆதரவு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிலையான அரசை ஸ்தாபிப்பதற்குப் பெரும்பாலான மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கருணா அம்மான் குறிப்பிட்ட கருத்து முற்றிலும் தவறானது.
இராணுவத்தினரினது உறவுகளின் உணர்வுகளை அவர் மீண்டும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளார். இவ்வாறான கருத்துக்களை இனி அவர் குறிப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியமைக்கு இராணுவத்தினர் மாத்திரமே பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்.
பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை தொடர்பில் தன்னிடம் குரல் பதிவு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு குரல் பதிவுகள் இருக்குமானால் அவற்றைபி பகிரங்கப்படுத்த வேண்டும். மதத் தலைவர்களை அவமதிக்கும் விதத்தில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்” – என்றார்.