மட்டக்களப்பு நகரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இந்த வேலோடியமலை அமைந்துள்ளது.
இந்த இடத்துக்கு போவதற்கு மட்டக்களப்பிலிருந்து திருமலை வீதியால் மாவடிவேம்பினை அடைந்து அதிலிருந்து சந்தனமடு ஆற்றை நோக்கி மணலும் கிறவலும் கலந்ததொரு பாதையால் அரைமணி நேரம் பயணிக்க அந்தப் பாதை சந்தணமடு ஆற்றில் வந்து முடியும்.
மழை இல்லாத காலமெனின் ஆற்றை ஒரு அடிக்கு குறைவான நீர்மட்டம் உள்ள இடங்களினை பார்த்து மோட்டார் சைக்கிளில் கடக்க முடியும்.
நீர் அதிகமாக உள்ள காலங்களில் இரு தோணிகளை பிணைத்து அதன் மீது மோட்டார் சைக்கிளை ஏறிக்கொண்டு பயணிக்க வேண்டும். இதற்காகவே பல தோணிக்காரர்கள் அந்த நீரோட்டம் கூடிய காலங்களில் தமது தோணிகளை தயார் நிலையில் வைத்திருப்பார்களாம்.
ஆற்றைக் கடந்து அக்கரைக்கு வந்தால் வழமைபோல யானைகள் நடமாடும் பிரதேசம் எனும் அடையாளங்கள் தென்படத் தொடங்குகிறது. சரி தொடர்ந்து போவோம்.
ஆற்றை கடந்த பின்னர் நிரந்தர வீதிகள் என்று எதுவும் இல்லை. நாம் செல்லும் வழிதான் வீதி. இந்தத் திசையில்தான் செல்ல வேண்டும் எனும் வழிப்போக்கரின் வழிகாட்டலில் பயணம் தொடர்ந்தது.
இந்த ஊரில் பெரிய சனத்தொகைகள் ஏதும் இல்லை. வழியில் காண்பவர்கள் அனைவரும் இந்த ஊரில் இருந்து நகருக்கு கூலி வேலைக்கு செல்பவர்களாகவும், ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும் தான் இருந்தார்கள்.
விவசாயமும் , மீன்பிடியும், கொள்ளி (விறகு) விற்பனையும் தான் இவர்களது ஜீவனோபாயம்.
சைக்கிள்களில் உயரமான கோபுரம் போல கம்புகளை கட்டி அதில் விறகுகளை வரிசையாக அடுக்கி நகர் பகுதிக்கு கொண்டு சென்று விற்பது இவர்களது அன்றாட வேலைகளில் ஒன்று. வழிகளிலும் இந்த கொள்ளிக்காரர்களை பார்ப்பதும் அவர்களை படம் பிடிப்பதும் வழி கேட்பதுமாக கடந்தது தூரமும் நேரமும்.
நிரந்தரமான வழிகள் எதுவும் இல்லாததால் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று என்னால் இங்கு குறிப்பிட முடியாத நிலையில் இருக்கிறேன் எனினும் ஒற்றையடிப்பாதைகளின் வழித்தடங்கள் போகும் போது வழிகாட்டியாக இருந்தது.
இலுக்குச்சேனையை நெருங்க நெருங்க ஒரு மாதிரியாக வேலோடியமலை தூரத்தில் தெரிய ஆரம்பித்தது. ஆனால் மலைக்குச் செல்லும் வழியை கண்டுபிடிக்க மிகவும் கடினமாக இருந்தது.
இது முன்னர் பழங்குடி வேடர்கள் வாழ்ந்த இடம். தற்போதும் அவர்களது வழித்தோன்றல்கள் தான் இங்கு இருக்கிறார்கள்.
இலுக்குச்சேனை ஆரம்பப் பாடசாலை ஒன்று அவ்வூரில் பார்க்கக்கூடிய ஒரு கட்டிடமாக இருந்தது. (சில வீடுகள் யுத்தத்திற்குப் பின்னர் நிறுவனங்களால் கட்டிக் கொடுக்கப் பட்டிருக்கும் போல ஒரே மாதிரி வீடுகள் சில கண்ணில் பட்டன.)
இலுக்குச்சேனை பாடசாலை இருந்த சந்தியில் இருந்து மலையை நோக்கியபடி இருந்த ஒற்றையடிப்பாதையால் சென்றோம். யானை வேலி குறுக்கே எம்மை இடைமறித்தது.
யானை வேலி Spring மாதிரி சுருள் வடிவத்தில கழட்டி திரும்ப பூட்டுற போல இருந்ததால இதுவும் மக்கள் பயன்படுத்திற வழி தான் என்ற நம்பிக்கை வந்திச்சி.
யானை வேலியை கடந்ததும் பாதை இன்னும் கரடுமுரடானது.
மணல் பாதையில் கற்கள் நிறைந்ததாகவும் யானை வந்தால் திரும்ப வேகமாக ஓடி தப்ப முடியாததாகவும் இருந்திச்சி.
அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வருகிறார். அவரிடம் சற்று விசாரித்த போது இந்தக்காட்டில் இரவில் மட்டுமல்ல பகலிலும் யானை நடமாட்டம் அதிகமாக இருக்கும் தம்பிகளா..! கவனமாக பாத்துப் போங்க என்று சொன்னபடியே சென்றார்.
ஏற்கனவே பயத்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தோம் இதில் அவர் கூறியது இன்னும் சற்று பயபக்தி கலந்ததொரு பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது. (போறவழியெல்லாம் சாமி பாட்டு தான்.. ஹா ஹா ஹா)
சுற்ற வர பறவைகளின் ஓசையையும் எமது குழுவினரது வாகன சத்தத்தினைவிடவும் வேற எந்த ஒலிகளும் காதில் கேட்கவில்லை. நேரமோ காலை 11 ஐத் தாண்டி இருக்க வேண்டும். வெயில் அனலாக எரித்துகொண்டிருந்தது.
பல தடைகளை தாண்டி வரும் போது ஒரு வறண்டு போன எரியில் ஒரு கிணற்றயும் பிள்ளையார் சிலையையும் (பட்டு கட்டிய கல்) பார்த்து மோட்டார் சைக்கிளை பிள்ளையார் சிலை இருந்த புளியமரத்தின் கீழ் வைத்து விட்டு. அருகில் இருந்த கிணற்றில் நீரருந்தி தாக்கத்தினை தீர்த்துக் கொண்டோம்.
இந்த கிணற்றினைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.
மூன்று நீரோடைகள் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட கொட்டுக்கிணறு. நீரோடைகள் வற்றியபோதும் இந்த கிணற்றின் நீர் மட்டம் குறையவில்லை. இந்த மலைப்பாங்கான பிரதேசத்தில் இவ்வளவு குளிர்மையான நீரிணை கிணற்றில் எடுத்து குடிப்போம் என எதிர்பார்க்கவில்லை.
வந்த களைப்பு தீர முகம், கை, கால்களை கழுவிவிட்டு கொண்டுவந்த கற்பூரத்தில் ஒன்றை பிள்ளையாருக்கு ஏற்றி வழிபட்ட பின்னர்தான் தெரிந்தது இதுதான் வேலோடுமலைக்குச் செல்வதற்கு வழிகாட்ட அடையாளமாக வைக்கப்பட்ட வழி பிள்ளையார் சிலை என்று.
அவிடத்தில் இருந்து அடர்ந்த பற்றைகளின் ஊடாக கால்நடையாகவே சென்றோம். வேலோடுமலை முருகன் கோவில் இருக்கும் இடத்துக்கு செல்ல இடையில் இருக்கும் ஒரு மலையை (சிறிய மலைதான்) கடக்க வேண்டும். மலை ஏறத் தொடங்கினோம்.
நாம் கடந்துகொண்டிருக்கும் இந்த மலையில் சிற்றரசர்கள் கோட்டை அமைத்து இருந்திருப்பார்கள் போல. அவ்வளவு இடிபாடுகள் திரும்பும் திசையெல்லாம் இருந்தது. (யுத்தத்துக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்)
கிணறு போன்ற பெரிய குழிகள் புதையல் திருடர்களின் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள் என்பதனை உணர்த்தியது.
மலையில் வட்ட வட்டமான பொழிவுகள் காணப்பட்டன. எதற்காக அதனை வடிவமைத்திருப்பார்கள் என உறுதியாக கணிக்க முடியவில்லை திரவியக்குளியாக இருக்கலாம் எனும் சந்தேகமும் இடைக்கிடையே வந்து போனது. அதில் தற்போது நீர், மண் போன்றவை நிறைந்து அழகிழந்து காணப்படுகிறது.
மலையில் அடிக்கு ஒரு லாக்கடை மரம் என சொல்லும் அளவுக்கு மரமும் அதில் இருந்து வரும் வாசனையும் எம் மண்ணின் பெருமையை பறைசாற்றிக்கொண்டு இருந்தன. (வீட்ட வந்த பின்பும் சட்டையில் இருந்த லாக்கடை பிசின் வாசனையை உணர முடிந்தது.)
வரும் வழியிலேயே நாம் பல அடி உயரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கையில் எம்மை அறியாமலேயே ஏறி உள்ளோம் என்பதை மலை உச்சிக்கு வந்த பின்னர் தான் உணர முடிந்தது.
ஏனெனில் நாம் இடையில் இருந்த மலையை கடந்து வேலோடுமலையை சென்றடைய நிறைய தூரம் (உயரம்) ஏறவில்லை எனினும் சுற்றி உள்ள ஊர்கள் , மலைகள் அனைத்துக்கும் ஒரு மையத்தில் இருந்து நாம் பார்த்துகொண்டிருக்கிறோம் என்பதை ஏறிய பின்னர் கூட நம்ப முடியாத நிலையில் இருந்தேன்.
இங்கிருந்து பார்க்கும் போது ஏறாவூர்ப்பற்றின் அனைத்து மலைதொடர்களையும் கண்டு வியக்கக்கூடியதாக இருந்தது.
1. வெள்ளைக்கல் மலை
2. தொப்பிக்கல் மலை
3. கேவர் மலை
4. கித்துள் மலை
5. குசலான மலை
6. கார்(car) மலை
7. குடும்பிமலை
8. குத்துக்கல் மலை
9. நாஞ்சோலை மலை (நாக மரங்கள் அதிகம் உள்ள மலை)
10. தொடர் மலை
11. திம்புலாகல மலை
12. கடைசி மலை
போன்ற மலைகளையும் வாழைச்சேனை வாவியின் எல்லைப்பகுதியியையும் இங்கிருந்து பார்க்கக் கூடியதாக இருந்தது.
சரி மலையில் இருக்கும் கோவிலுக்கு செல்வோம் போகும் போதே தெரிந்தது இந்த கோவில் இன்னும் கும்பாபிசேகம் நடைபெறவில்லை என்று. ( கோவிலில் கலசத்தினை காணவில்லை)
கோவிலிலும் மலை ஏறியவுடன் கண்ணின் பட்டது பிள்ளையார் பந்தல் தான். சீமெந்து கட்டிடம் தான் முன்னால் கொத்துப்பந்தல் போடப்பட்டிருந்தது. திருவிழா காலங்களில் கொத்து பந்தல்கள் புதுப்பிக்கப்படும் மற்றய நாட்களில் அரைகுறையாக காய்ந்த நிலையில் இருக்கும்.
வைரவரும் குமாரரும் கம்பீரமாய் காவலுக்கு இருக்கிறார்கள்.
(குமாரர் ஆதிக்குடிகள் வழிபடும் காவல் தெய்வங்களில் ஒன்று இது தற்போதைய முருக வழிபாட்டுடன் ஒத்தது)
சில இடங்களில் வேல் வைத்து அதற்கும் கொத்துப்பந்தல் கட்டியிருந்தது. பல தங்க முலாம் பூசிய பணக்கார கோவில்களில் இல்லாத ஒரு சிறந்த உணர்வை இந்த கொத்துப் பந்தல்களில் அமைந்த ஆலயம் எமக்கு தந்தது.
சிவலிங்கம் மலையில் ஒரு புற எல்லையில் அமைந்திருந்தது.
பழைமையான முருகன் கோவில் ஒன்று இங்கு இருந்துள்ளது எனும் தகவல் கிடைத்தது. அது 1000 வருடங்கள் வரை பழைமையானதாக இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் ஐயா வாய்மொழி உரையாடலில் நண்பர் ஒருவருக்கு சொல்லியிருந்தார்.
வேல் + ஓடிய + மலை = வேலோடியமலை அல்லது வேலோடுமலை எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த பெயர் இந்த மலைக்கு வந்த காரணம் முருகனது வேல் வந்து வீழ்ந்த இடங்களில் ஒன்றாக இது கருதப்டுகிறது.
வேல் விழுந்த இடத்தின் சுவடுகளை கீழே படத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும்.
மலையில் வேரோடிய கோடுகள் ( தேரோடின கோடுகள்) அதிகமாக இருப்பது இந்த மலையில் பழைமையை சற்று அதிகமாக தேட வேண்டும் போல் எண்ணத்தை தூண்டுகிறது.
இங்கே நடுகல் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் குடுத்திருப்பது. இது பழைமையான கோயில் என்பதை நான் இங்கு குறிப்பிட்டு சொல்வதற்கு இன்னும் ஒரு வலுவான ஆதாரமாக சொல்லலாம்.
நடுகற்கள் என்பது வீர மரணம் அடைந்தவர்களது நினைவாக வைத்து அவர்களையே அவ் இடத்தின் காவல் தெய்வமாக உருவகித்து நடப்படும் தூண் வடிவிலான கல்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் மக்களின் இருப்பும் பாதுகாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையே. முகநூல் பதிவிலிருந்து…