கருணா அம்மானுக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும்,சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் குற்றவியல் விசாரணை திணைக்களம் அவரிடம் 7 மணி நேரத்தை செலவிடும் அவசியமில்லையெனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கருணா அம்மான் சண்டியனை போல் பேசினார். இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தி தரம் தாழ்த்தவே அதனை செய்தார்.
மூவாயிரம் பேரை கொன்றதாக கூறுகிறார். அப்படி யாரும் சாகவில்லை. முல்லைத்தீவில் ஆயிரத்து 200 பேர் சரணடைந்தனர். சரணடைந்த பின்னர் ஆயிரத்து 200 பேரை கொன்றனர். கிளிநொச்சியில் அவர் யாரையும் கொல்லவில்லை. ஆணையிறவிலும் கொல்லவில்லை.
கருணா பெரிய மனிதனா அல்லது சிறிய மனிதனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் கருணா அம்மானுக்கு எதிராக நிச்சயம் சட்டம் அமுல்படுத்தப்படமாட்டாது.
அவர் தன்னை பயங்கரவாதி என ஏற்றுக்கொண்டுள்ளார். அரச படையினரை கொன்றதாக கூறுகிறார். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் சீ.ஐ.டியினர் 7 மணி நேரம் கஷ்டப்பட தேவையில்லை. அரை மணி நேரத்தில் தீர்மானத்தை எடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரலாம் எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.