நாடாளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், முதலாவது தேர்தல் முடிவு 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் 11,12,13ஆம் திகதிகளில் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும். ஜூலை 29ஆம் திகதியின் முன்னர் வாக்காளர்களிடம், வாக்காளர் அட்டை சேர்ப்பிக்கப்படும்.
அஞ்சல் வாக்குப்பதிவு ஜூலை 14, 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறும். அந்த நாட்களில் அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்த முடியாத அரசு ஊழியர்கள் ஜூலை 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
இதேவேளை, வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது குறித்து ஆராய இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமாக இடம்பெறும் நிலையில், இம்முறை வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. வாக்களிப்பை காலை 6.30 மணிக்கு ஆரம்பித்து, மாலை 4.30 மணிக்கு நிறைவடைதல் அல்லது 7 மணிக்கு ஆரம்பித்து 5 மணிக்கு நிறைவடைதல் என்ற இரண்டு யோசனைகள் இன்று ஆராயப்படவுள்ளது.