சிங்களத் தலைவர்கள் கடந்த 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை செய்து வந்துள்ளதாக தெரிவித்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வடக்கு முன்னாள் முதலமைச்சர் உட்பட பலரும் கோரிவரும் சமஸ்டித் தீர்வை சிங்கள மக்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு வழங்கி விடமாட்டார்கள் என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
ஜெனீவா உட்பட சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் சிங்கள மற்றும் பௌத்த மக்களுக்காகவும் ஸ்ரீலங்கா படையினருக்காகவும் குரல் கொடுத்துவரும் அட்மிரல் சரத் வீரசேகர இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுகின்றார்.
இந்நிலையில் கொழும்பில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய அவர், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் ஆகியோர் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கில் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியமை குறித்த செய்தியை பத்திரிகையில் அவதானித்தேன். சுயநிர்ணயம் என்பது இந்த நாட்டை சமஸ்டி ஆட்சிக்கு உட்படுத்தும் நோக்கிலேயே அப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் என்பவரும் இநத நாடு சமஸ்டி ஆட்சியாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எமது நாடு ஒற்றையாட்சி உடையது. கடந்த யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளதுடன் மேலும் ஆயிரக்கணக்கான படையினர் அங்கவீனமுற்றிருப்பது இந்த நாட்டை தொடர்ந்தும் ஒற்றையாட்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகும். தமிழீழ விடுதலைப் புலிகளும் தொடர்ந்தும் ஸ்ரீலங்காவை சமஸ்டி ஆட்சிமுறைமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போராடினார்கள்.
எனினும் போரின் போது அவ்வளவு பெரிய தியாகம் செய்து ஒற்றையாட்சியைப் பாதுகாத்த நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமஸ்டியாட்சியாக மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம். முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் ஒருமுறை மக்கள் மத்தியில் இனப்பிரச்சினை கலவரத்தை ஏற்படுத்தவே இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் வடக்கு முதலமைச்சராக இருந்தகாலத்தில் 27 யோசனைகளை நிறைவேற்றியிருந்தார். அவ்வளவும் சிங்கள இனத்திற்கு எதிரானவையாகும். 1978ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டை ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்கள் ஆட்சிமுறையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததாகவும் 1978ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்கள் தமிழ் பெண்களை திட்டமிட்டபடி கருத்தடை செய்ததாகவும் யோசனை முன்வைத்து நிறைவேற்றியிருந்தார்.
இது முற்றிலும் பொய்யானதாகும். நல்லாட்சி அரசாங்கமானது இந்த யோசனைகளை நிராகரிக்கவே இல்லை. விக்னேஸ்வரன் மிக நீண்டகால திட்டமாகவே இப்படி செய்திருக்கின்றார். ஈழத்தைக் கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏதாவது ஒருநாடு பிரிந்து செல்ல வேண்டுமென்றால் அதற்கான முதற்படியாக குறித்த மக்கள் ஏதாவதொரு காரணத்தில் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை முன்வைப்பதே யதார்த்தம்.
ஆகவே தான் 1978ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தமிழ் மக்களும் இன்னல்களை அனுபவித்ததாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இப்படி கருத்தை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கையை எடுக்க உத்தேசித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.



















