திருமணத்தின் பின்னர் பெண்கள் அணியும் குங்குமப் பொட்டு, கைவளையல்களை பெண்ணொருவர் அணியாததால், அவரது கணவரின் விவாகரத்து கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சுவாரஸ்ய சம்பவம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடந்தது.
அந்த மனுவில், மனைவியுடன் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தேன். தனிக் குடித்தன பிரச்னையால் ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். வயதான என் தாயை பராமரிக்கிறேன். அவரை கைவிட்டு வருமாறு மனைவி கூறுகிறார். நான் மறுத்ததால், குடும்பத்தார் சித்ரவதை செய்ததாக பொய் புகார் அளித்துள்ளார்.
மேலும், ஹிந்து முறைப்படி திருமணமான பெண்கள் அணியும் வளையல், நெற்றிப் பொட்டு ஆகியவற்றை, மனைவி உதறி விட்டார். இதில் இருந்து அவருக்கு திருமண பந்தத்தில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகவே, விவகாரத்து வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, கணவர், கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதி, அஜய் லம்பா தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் தீர்ப்பில்-வாதியின் மனைவி, கை வளையல்கள், நெற்றிப் பொட்டு ஆகியவற்றை அணியாமல் இருக்கிறார். இது, தான் திருமணமாகாதவர் என்பதை காட்டுவதற்காகவோ அல்லது கணவருடனான திருமண பந்தத்தை ஏற்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவோ இருக்கலாம்.
இதில் இருந்து, அவருக்கு கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதை குடும்ப நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மேலும், கணவரின் குடும்பத்தார் சித்ரவதை செய்ததற்கு ஆதாரம் இல்லை. இதுபோல ஆதாரமற்ற புகார்களை கணவர் மீது மனைவி கூறுவது கிரிமினல் குற்றம் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது. எனவே, வாதியின் கோரிக்கையை ஏற்று விவாகரத்து வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.



















