தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்கு முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தின் பிடியில் தனது காணியை பறிகொடுத்து சொந்த நிலத்தை மீட்பதற்காக இடம்பெற்றுவரும் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்துவரும் காணாமல் ஆக்கபட்டவரின் சகோதரனான நவரத்தினம் டிலக்சன்(25) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (29) இளைஞரின் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் குறித்த இளைஞரை கைவிலங்கிட்டு கைது செய்து கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை தடுப்பு பிரிவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்தமைக்கான காரணம் அடங்கிய சான்று துண்டை வீட்டாரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கையளித்துள்ளனர்.
அந்த ஆவணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்கம் செய்வதற்கு உடந்தையாக இருந்தமை என காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.


















