இந்தியாவின் பீகார் மாநிலத்தில் திருமணம் முடிந்து இரண்டு நாட்களில் கொரோனா தாக்கத்தால் மணமகன் உயிரிழந்துள்ள நிலையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவுக்கு அருகிலுள்ள பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி திருமணம் இடம்பெற்றது.
இதனையடுத்து திருமணம் முடிந்து இரு நாட்களில் மாப்பிள்ளை திடீரென்று உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அத்துடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
இறந்த மணமகன் திருமணத்திற்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. எனினும் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
எனினும் மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென முடிவுகள் வந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தும், தங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்ததோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல், 50 க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்க குடும்பத்தினர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.