ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெண்கள் எனக்கு வாக்களிக்கவும், ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அமரர் ரவிராஜினுடைய மனைவியாருக்கும் வாக்களிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் தனக்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
அமரர் ரவிராஜினுடைய மனைவி சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை நான் வரவேற்கின்றேன். அவருடைய கணவனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.
நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன. அதனால் சசிகலா மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். சசிகலா தான் பிரதிநித்துவப்படுத்தும் கட்சியின் ஊடக நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
பெண்கள் எனக்கு கட்டாயம் வாக்களிக்கவும். ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அமரர் ரவிராஜினுடைய மனைவிக்கும் வாக்களிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் கூட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடை கொண்டு வந்திருந்தோம்.
அதன் மூலம் பிரதேசசபைகளில் பெண்களின்பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடியாத இருந்தது.
நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டிருந்த நிலையில் தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
எனினும் அநேகமான கட்சிகளில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் வெற்றி மக்களின் கைகளிலேயே உள்ளது. நான் கடந்த பத்து வருடங்களாக மக்களுக்கான பல சேவைகளை செய்து வருகின்றேன்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் நான் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அதில் தவறும் பட்சத்தில் தேசியப் பட்டியலில் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


















