இந்த அழகான தேசம் பிரிந்து விடக்கூடாது, நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மனங்குளம் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரையில் நாம் மிக நிதானமான போக்கோடு களம் இறங்கி இருக்கின்றோம்.
இந்த தேர்தலிலே இந்த நாட்டிலே அழகான தேசத்திலே தமிழர்களும் முஸ்லிம்களும், சிங்களவர்களும், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வோடு நாங்கள் முயற்சிக்கிறோம்.
கடந்த காலங்களிலே இந்த நாட்டிலே மூன்று தசாப்தமாக யுத்தம் இடம்பெற்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் உயிர்களை பலி கொடுத்தார்கள். பல அழிவுகளை சந்தித்தார்கள். பல இழப்புகளை நாங்கள் சந்தித்தோம்.
அகதிகளாக்கப்பட்டோம். அழைந்து திரிந்தோம். பல்வேறு துன்பங்களை எல்லாம் நாங்கள் அனுபவித்தோம்.
ஒரு சில பேரினவாதசக்திகள் இந்த நாட்டிலேயே மிக மோசமான செயல்பாடுகளை ஆரம்பித்தார்கள்.
தமிழ்ச் சமுதாயத்தின் மீது அன்று அம்புகளை எய்தவர்களும் அவர்களை மோசமாகக் காட்டியவர்களும் பின்னர் முஸ்லிம்கள் மீது தங்களுடைய பார்வையைச் செலுத்த தொடங்கினார்கள்.
திட்டமிட்டுச் சதி செய்தார்கள். பல பிரச்சினைகளை உண்டாக்கினார்கள். தம்புள்ளையில் தொடங்கி திகன வரைக்கும் பிரச்சினைகள் நடந்தது. எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு சில சாரார் காரணமாக இருந்தார்கள்.
இந்த அழகான தேசம் பிரித்து விடக்கூடாது. பிளவுப்பட்டு விடக்கூடாது. இந்த தேசத்திலேயே, இந்த நாட்டிலே நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை.
சிறுபான்மை தலைமைகளை ஜனநாயகத் தலைமைகளை அடங்கச் செய்கின்ற அடிமைப்படுத்த நினைக்கின்ற சதி நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று எனது குடும்பத்தில் ஒரு எனது சகோதரனை அநியாயமாக கைது செய்து வைத்திருக்கிறார்கள்.
அவரின் மீது எந்தக் குற்றமும் இல்லை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கிறார்கள்.அவர் மீது குற்றம் இருந்தால் அந்த குற்றத்தை நீதிமன்றத்தில் சொல்லி அவருக்கு மரண தண்டனை கொடுத்தாலும் பரவாயில்லை அவர் தப்பு செய்திருந்தால்.
ஆனால் தப்புச் செய்யாத ஒருவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து கொண்டு நீண்ட காலம் அடைத்து வைப்பது ஒரு நியாயம் இல்லாத வேலை என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
என்னுடைய சகோதரராக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இவ்வாறு தடுத்து வைத்திருப்பது நியாயம் இல்லை.
எனவே இந்த நாட்டிலேயே நீதி நியாயம் இருக்குமாக இருந்தால் அந்த நிரபராதி நிச்சயமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
இந்த நாட்டிலே நிலையான நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்றால் நியாயத்துக்காக உண்மைக்காக வாக்குகளை தாருங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.