மட்டக்களப்பு – வெல்லாவெளி கிராமம் தொல்பொருளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறி விகாரை அமைக்கப்படும் ஆபத்தான நிலை சில பிக்குகளால் ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளருமான தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
எனவே முடிந்தால் வீரம் பேசும் முன்னாள் பிரதியமைச்சரான கருணாவால் அதை தடுத்து நிறுத்த முடியுமா? என பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
மத்தியமுகாம் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
சிங்கள பேரினவாத அரசு ஒப்பந்த அடிப்படையில் சில அரசியல்வாதிகளை அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கியிருக்கின்றது.
இவர்களால் தமிழர்களுக்கு என்ன நிலைமை நிகழ போகின்றது என்பதை எமது முதுநிலை தமிழர்கள் சொல்லியிருப்பார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் கடந்த காலத்தை சிதைத்த சில அரசியல்வாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கீழ்த்தரமாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பைத் தவிர வேறு விடயங்களைச் சொல்லி மக்களை அணிதிரட்ட முடியாதா என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப வேண்டும்.
நாங்கள் யாரையும் விமர்சனம் பண்ணவில்லை. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
அரசியல் பயணத்தில் பல ஏமாற்றங்களை பின்னடைவை சந்தித்தாலும் எமது தமிழ் மக்களைப் பொறுத்தளவில் சிறந்த அரசியல் முன்னகர்வு செய்து கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் பொய்யை மெய்யாக்கி, மெய்யை பொய்யாக்கி அரசியல் செய்தவர்கள் அல்ல. இலங்கையிலே மிக வறுமையான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் விளங்குகின்றது.
அங்கு பல அபிவிருத்திப் பணிகள் செய்ய வேண்டி இருக்கும் போது பெரும்பான்மை தமிழர்கள் வாழும் மட்டு மாவட்டத்தில் அங்கே மக்களால் போட்டியிட முடியாமல் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்.
அம்பாறை மாவட்டத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு அரசியல்வாதி இறக்கப்பட்டு இருக்கிறார் என்றால் நாங்கள் சிந்திக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்கள் அறியாத ஒருவர் பத்து வருடங்கள் பிரதியமைச்சராக இருந்திருக்கின்றார் என்பதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.
உள்ளூராட்சி மன்ற சட்டம் என்பது என்னால் இயற்றப்பட்ட ஒன்றல்ல. ஒரு தவிசாளர் விடுமுறையில் சென்ற காலத்தில் அதற்கு அடுத்த படியாக இருக்கும் பிரதி தவிசாளர் அதன் பணிகளை மேற்கொள்வார்.
ஆனால் அதற்காக அவர் தவிசாளர் ஆக முடியாது. 25இற்கும் மேற்பட்ட தவிசாளர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு பதிலாக பிரதி தவிசாளர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். 82 வீதம் முஸ்லிம்கள் வாழும் பொத்துவில் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் பதில் தவிசாளராக இருக்கின்றார்.
இதனை அறியாமல் பைத்தியம் பிடித்தவர்கள் போன்றும் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்.
வெல்லாவெளி கிராம் தொல்பொருளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. முடிந்தால் வீரம் பேசும் பிரதியமைச்சர் அதை தடுத்து நிறுத்த முடியுமா?
இதனைகூட தடுப்பதற்கான ஒரே ஒரு சக்தி நாங்கள்தான். நாங்கள் உரிமையோடு நிலையான அபிவிருத்தியை மேற்கொள்ள பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
யாருக்கும் சோரம் போக மாட்டோம். எங்களது மக்களின் இலட்சிய சிந்தனையில் பயணித்து கொண்டிருக்கும் எங்களை திட்டமிட்டு சிதைப்பதற்கு பேரினவாதம் கங்கணம் கட்டி செயற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.