கொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ‘புபோனிக் பிளேக்’ என்ற நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாட்டில் சகோதரர் இருவருக்கு இந்நோய் உறுதியானதால் மக்கள் பீதியில் உள்ளனர். வடக்கு சீனாவில், ‘புபோனிக் பிளேக்’ நோய் பரவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்கோலியா என்ற மாகாணத்தில் பையனூர் நகரில், சகோதரர்கள் இருவர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் இருந்து, புபோனிக் (வேகமாக பரவும் வகை) பிளேக் நோயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, மூன்றாம் எண் நோய் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டு, மக்கள் பின்பற்றுமாறு சீன அரசு வலியுறுத்தியுள்ளது.
உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் காட்டு அணில் கறியை உண்டதாலேயே இந்த பிளேக் நோய் அவர்களுக்கு தொற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் காட்டு அணில் கறியை மக்கள் உண்ண வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
இந்த புபோனிக் பிளேக்கானது, எலி போன்ற கொறிக்கும் வகை உயிரினங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை பாக்டீரியா மூலம் பரவுகிறது. தற்போது உயிரிழந்த இருவருடன் தொடர்பில் இருந்து 146 பேரை தனிமைப்படுத்தி உள்ளனர்.
இவ்வகை பிளேக் நோய் ஏற்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை வழங்காவிட்டால், 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.
சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் புபோனிக் பிளேக்கால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா வைரசால் உலகமே அவதிப்பட்டு வரும் நிலையில், புபோனிக் பிளேக் நோயால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.