சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளாரே தவிர அவர்களை விடுவிக்கவில்லை என யாழில் இளைஞர்கள் சுமந்திரன் மீது தமது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துள்ளனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் கஜதீபன் தலைமையில் யாழில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே இளைஞர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதன் போது சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் குறித்த இளைஞர்கள் தெரிவிக்கையில் ,
பொதுவான அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நீங்கள் முயற்சிக்கவில்லை. மாறாக சுமந்திரன் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார்.
சுமந்திரனால் மேலும் 16 அரசியல் கைதிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்விடயத்தில் நீங்கள் எதிர்கட்சியாக இருந்து செய்தது என்ன?
தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென சுமந்திரன் கூறியிருந்ததை தமிழரசுக் கட்சி அது அவரது தனிப்பட்ட கருத்து என கூறியிருந்தது.
இலங்கை அரசியலில் முக்கியமான வகிபாகம் வகிக்கும் பிரதான கட்சியொன்றின் ஊடக பேச்சாளர் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லக்கூடியவரின் கருத்தை தனிப்பட்ட கருத்தாக கருதினால் அவரை நம்பி எப்படி மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்ய முடியும்?
மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் பதிவு செய்யப்பட்ட சட்டபூர்வ தலைவர் இரா.சம்பந்தன் தானா? என்பது தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் என்று கூறி தமிழரசு கட்சி மற்றும் சுமந்திரன் தொடர்பிலான பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளனர்.