சுவிஸ் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏராளமானோர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
Neuchâtel நகரிலுள்ள பகல் நேர குழந்தைகள் காப்பகம் (creche) ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு பணி புரியும் ஊழியர்களும், அங்கு தங்கவைக்கப்படும் குழந்தைகளும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையன்று அந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டதோடு, சுமார் 50 குழந்தைகளும் ஊழியர்கள் பலரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர், யாரையும் சந்திக்க இயலாதபடி கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆங்காங்கு இதைப்போல் கொரோனா தொற்றுகள் உருவாகும்போது, அவற்றை கையாள இந்த தனிமைப்படுத்தல் அவசியம் என அம்மாகாண மருத்துவரான Claude-François Robert தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே சுவிட்சர்லாந்தில் இதுபோல் ஆங்காங்கு கொரோனா தொற்று உருவாகி வந்தாலும், குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இப்படி கொரோனா தொற்று பரவியுள்ளது இதுவே முதல்முறையாகும்.