நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட டிக்கோயா தரவளை கொலனி பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் உள்ளடங்கலாக நூறு பேருக்கு வயிற்றுவலி, காய்ச்சல் வாந்தி தலைசுற்று என்பன ஏற்பட்டு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாக அம்பகமுவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நோய் ஏற்பட்டமைக்கான காரணம் குறித்த பகுதியில் மக்கள் பருகும் குடி நீராக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். டிக்கோயா, தரவளை கொலனி பகுதியில் 160ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த பகுதிக்கு சிங்கமலை வனபகுதியில் இருந்து குடி நீர்வழங்கபடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த அம்பகமுவ பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் காமதேவன் தலைமையில் குறித்த பகுதியில் உள்ள நீர்த் தாங்கியினை சுத்தம்செய்து நீர் தாங்கிக்கு குளோரின் இடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
நீரின் மாதிரி பரிசோதனைக்காக கண்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் தரவளை கொலனி பகுதிக்கு சென்ற நோர்வூட் பிரதேசசபையின் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.