நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது நோக்கமாகும். இதற்கு மக்கள் தெளிவான அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டும். எமது அரசாங்கத்தில் நம்பிக்கை வைத்து வாக்களிக்குமாறு வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழம் தமிழ் மக்களிடம் நாம் கோருகிறோம். நீங்கள் வழங்கும் வாக்கிற்கான பாதுகாப்பையும், பொறுப்பையும் நிறைவேற்றுவோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் காரணமாக கொரோனா இரண்டாவது அலை ஏற்படாது. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இல்லாமையே இப்பொழுது பிரச்சனை. எமக்கிடையில் விருப்பு வாக்கிற்கு மோதிக் கொள்வதை தவிர எமக்கு வேறு போட்டிகள் கிடையாது. நாட்டிற்கு உகந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது நோக்கமாகும். 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யாப்பில் 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேவைக்கும், அழுத்தத்திற்கும் உட்பட்டு ஒவ்வொரு திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
நாட்டு மக்களின் நலன்களிற்கு ஏற்ப புதிய அரசியல் யாப்பை உருவாக்க, மக்கள் தெளிவான அதிகாரத்தை வழங்க வேண்டும். அல்லது சிலரது பணயக்கைதியாக மாறி, அரசியலமைப்பை உருவாக்கும் நிலை உருவாகும். 19வது திருத்தத்தை பொறுப்பேற்க இன்று எவரும் கிடையாது. கடந்த காலத்தில் தேர்தலின் முன்னர் எமது வெட்பாளர்கள் கைதாகியுள்ளனர். தேர்தல் நடுநிலையாக நடைபெற வேண்டும். நாம் யாரையும் பழிவாங்க மாட்டோம். தவறு செய்தவர்களிற்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்யும்.
ஓகஸ்ட் 6ஆம் திகதிக்கு பின்னர் உருவாகும் புதிய அரசின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இந்த ஆண்டு நவம்பரில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.