எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் இரண்டாவது இடத்தை பெறும் நபர் நெருங்க முடியாத அளவுக்கு வரலாற்றில் பதியக் கூடிய சாதனையை நிலைநாட்டி பொலன்நறுவை மாவட்டத்தில் வெற்றி பெற போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்நறுவை திம்புலாகலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
என்னை விமர்சிக்கும் நபர் பொலன்நறுவைக்கு கூடுதல் சேவைகளை செய்யவில்லை, மைத்திரிபால சிறிசேனவே செய்தார் என்ற விடயம் மக்களின் மனங்களில் உள்ளது.
ஓய்வாக நாற்காலி ஒன்றில் அமர்ந்து மைத்திரிபால சிறிசேன பொலன்நறுவை மாவட்டத்திற்கு என்ன செய்தார் என்பதை சிந்தித்து பார்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
பொலன்நறுவையில் அரசியல் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று அறிந்தவர் என்னை விட எவரும் இருக்க மாட்டார்கள். நான் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி இருந்தாலும் என்னுடன் போட்டியிட அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. பொலன்நறுவை மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால் அவர்களுக்கு பதிலளிக்க எதுவுமில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.


















