கடந்த முறை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆசனங்களை வழங்கி பிச்சை போட்டுள்ளதாக சிலர் கூறுகின்றதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் அப்படியானவர்கள் தங்களுக்கு ஆட்சி அமைக்க கூடிய பலம் இருந்தும் இயலாமை காரணமாக மாற்று சமூகத்தினரிடம் ஆட்சி அமைக்க கூடிய வழிவகையினை கையளித்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் கட்சியின் தலைவரும், வேட்பாளருமான முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஆதரித்து வாழைச்சேனையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரையின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு மயிலங்கரச்சை மங்களராமைய விகாராதிபதி மகிந்தாலங்கார தேரர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவருமான நாகலிங்கம் திரவியம் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது நாகலிங்கம் திரவியம் மேலும் கூறுகையில்,
நாம் வாக்களிக்கும் நபர்கள் எமது சமூகம் சார்ந்த விடயத்தினை கவனத்தில் கொள்ளாது தங்களை வளப்படுத்தும் தயார்படுத்தும் நடவடிக்கையிலேயே அதிகம் ஈடுபடுவார்கள்.
சமூகத்திற்கு அவர்கள் எதுவும் செய்வதில்லை. இதேவேளை செயற்படாமல் இருந்த கிழக்கு மாகாணசபையை பொறுப்பெடுத்து திறம்பட சேவையாற்றிய சந்திரகாந்தன் நான்கரை வருடம் கடந்தும் சிறைச்சாலையில் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்தும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
இந்த நிகழ்வு தொடர்பில் மட்டக்களப்பு வாழ் புத்தி ஜீவிகள் சிலர் அடிப்படையில் சில வினாக்களை முன்வைக்கின்றனர். இவற்றுக்கு உங்கள் பதில் என்ன?
- வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த தமிழ் கட்சிக்காவது பௌத்த தேரர்கள் தலைமை தாங்கியிருக்கிறார்களா?
- தமிழ் மக்களுக்காக கிழக்கு தமிழர்களுக்கான விடுதலை என்கிற கோசத்தோடு பௌத்த துறவியை மேடையில் அமர வைத்ததன் நோக்கம் என்ன?
- அண்மையில் மட்டக்களப்பு – வெல்லாவெளி வேற்றுச்சேனை எல்லைக்கிராமத்தில் விகாரை அமைக்க சென்ற பிக்கு தொடர்பில் நீங்கள் இன்று வரை மௌனம் காப்பதன் காரணம் என்ன?
- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பௌத்த துறவிகள் கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய காரணம் என்ன?
- கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட தொல்பொருள் செயலணி தொடர்பிலோ, அதில் தமிழ்கள் உள்வாங்கப்படாமை தொடர்பிலோ எங்கும் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமைக்கான காரணம் என்ன?
- உங்கள் கூட்டங்களை பௌத்த துறவிகள் தலைமை தாங்கும் நிலையிலா மட்டக்களப்பில் உங்கள் கட்சிக்கு தமிழ் மக்களின் ஆதரவு இருக்கிறது?
- உங்களை நம்பி வாக்களித்தால் எதிர்வரும் ஐந்தாண்டு கால நாடாளுமன்ற காலத்தில் நீங்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாக உண்மையாக செயற்படுவீர்களா?
- நீங்கள் தனியாக தேர்தலில் போட்டியிட்டாலும் அரசை மீறி உங்களால் எதையும் செய்ய முடியுமா?
- உங்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பௌத்த துறவிக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதம் என்ன?
- தமிழர்களின் உரிமை விடயத்தை அரசிடம் உங்களால் முழுமையாக விவரிக்க முடியுமா என மட்டக்களப்பு வாழ் புத்தி ஜீவிகள் கேள்வியெழுப்புகின்றனர்.
மதத்தலைவர்கள் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது சர்ச்சை அல்ல. அது அரசு சார்ந்த நிகழ்வுகளாக இருக்கலாம் அல்லது கலாச்சார நிகழ்வுகளாக இருக்கலாம்.
ஆனால் ஒரு கட்சியின் சாதாரண தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர்கள் தலைமை தாங்கியமை மட்டக்களப்பு வாழ் தமிழர்களிடம் பலத்த எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது.