அங்குலன, லுனாவ பகுதியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் இல்லத்திற்கு, மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நேரில் சென்று, குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த பொலிசார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நேற்று அதிகால 12.20 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. 4 பிள்ளைகளின் தந்தையான அமித் கருணாரத்ன (39) என்வரே கொல்லப்பட்டிருந்தார். மீனவரான அவரும், ஏனைய 3 மீனவர்களும், மீன்பிடிக்க செல்வதற்காக 2 முச்சக்கர வண்டியில் கடற்கரைக்கு சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
லுனாவ பாலம் அருகே பொலிசார் சிலர் திடீர் வீதித்தடை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.
பொலிசார் மற்றும் சாட்சிகளின் கூற்றுப்படி, வாகன வருமானவரி பத்திரத்தை சரிபார்க்க முயன்றபோது பாதிக்கப்பட்டவருக்கும் பொலிஸ்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர் ஒரு அதிகாரியை கல்லால் தாக்க முயன்றதாகவும், இதனால் பொலிஸ் உத்தியோகத்தர் சுட நேர்ந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக குறைந்தது 4 சாட்சிகள் இருப்பதாக, அவர்கள் பத்திரிகையாளர்களுடன் பேசினர். அவர்களின் கூற்றுப்படி, பொலிசாருடனான வாதத்தின் பின், அவர் அங்கிருந்து வெளியேற திரும்பியபோது பொலிசாரின் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரதேசவாசிகள் கோபமடைந்து அந்த பகுதியில் குவிந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதைடுத்து அங்குலான பொலிஸ் நிலையத்தை சுற்றி கலகமடக்கும் பொலிசார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால் வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை.
பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஈடுபட்டார். நேற்று மாலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உயிரிழந்தவரின் வீட்டுக்கு நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடக்குமென உறுதியளித்தார். விசாரணையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அதிகாரி குற்றமிழைத்தது கண்டறியப்பட்டால் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உயிரிழந்தவரின் மகனொருவர், தனது தந்தை பொலிஸ் அதிகாரியொருவரால் இழிவுபடுத்தப்பட்டதாகவும், அவரது வார்த்தைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, தந்தை தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் வருமானத்திலேயே குடும்பம் தங்கியிருந்ததாகவும், தமக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார். சம்பவத்திற்கு நீதி வழங்கப்படும் என தேசபந்து தென்னக்கோன் மீள உறுதியளித்தார்.
அந்த பகுதிகளிலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் சட்டவிரோத குழுக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களை தூண்டி விட முயல்வதாக தெரிவித்த தேசபந்து தென்னக்கோன், அப்படியானவர்களின் வலையில் விழாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி உறவினர்களையும் விழிப்பூட்டும்படி குடும்பத்தினரை கேட்டுக் கொண்டார்.
அத்துடன், உயிரிழந்தவரின் சிறுவர்களின் நலன்களை பொலிசார் கவனிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.