நாட்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அதன் கொழும்பு மாவட்ட பிரதான வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாத்தறை தெனியாய பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இம்முறை தேர்தல் பிரசாரத்துடன் கிராம ராஜ்ஜியம், நகர ராஜ்ஜியம் என்ற எண்ணக்கருவை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். இந்த திட்டத்தின் ஊடாக நாட்டின் ஒன்பது மாகாணங்களில், 25 மாவட்டங்களில், 51 ஆயிரம் கிராமங்களில் நடக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நாட்டின் பிரதமர் அறிந்திருக்க வேண்டும்.
அந்த செயற்பாட்டு முறையை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம். புதிய வேலைத்திட்டங்கள் ஊடாகவே நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். அதிகமாக பேசப்படும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடர்பான பொறுப்பை தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே தேர்தலை அவசரமாக நடத்த வேண்டாம் அதனை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடமும் அரசியல் தலைவர்களிடமும் கோரினோம்.
தேர்தலுக்கு அஞ்சி நாங்கள் இதனை கூறுவதாக அரசாங்கம் நினைத்தது. நாங்கள் தேர்தலுக்கு அஞ்சுகிறோம் என்று எப்படி கூற முடியும். கட்சி என்ற வகையில் நாங்களே அதிகமான கூட்டங்களை நடத்துகிறோம். ஆயிரம் கூட்டங்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இன்றைய தினம் ஏழு தொகுதிகளில் ஏழு கூட்டங்களை நடத்துகிறோம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.