கலஹா நில்லம் தபால் நிலையத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்குவதற்காக பேராதனை தபால் நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட 140, 000 ரூபா கொண்ட பணப் பொதியில் ஒரு இலட்சம் ரூபா பணத்தக்குப் பதிலாக காகித கட்டுக்கள் இருந்தமை தொடர்பில் தபால் அதிபர் கலஹா பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை வழமை போல் மேற்குறிப்பிட்ட தபால் நிலையத்திலிருந்து வாகனத்தில் கொண்டு வரப்பட்ட பணப் பொதியை நில்லம்பை தபால் நிலைய அதிபர் ஹேபாலிகா மங்களி சேனாரட்ட கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அங்கு வரிசையில் காத்து கொண்டிருந்த ஓய்வூதியம் பெற வந்தோருக்கு கொடுப்பதற்காக பணப் பொதி பிரித்தபோது 40,000 ரூபா பணமும் மீதி ஒரு இலட்சம் ரூபாவுக்குப் பதிலாக வெறும் காகிதக்கட்டுக்களும் இருந்ததை கண்டு மேற்படி சம்பவம் குறித்து கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் பணம் காணாமல் போனமை தொடர்பில் கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் மாகெதரவின் ஆலோசனைக்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.