யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரின் சகோதரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் கம்பஹாவை சேர்ந்த மாணவியொருவரின் சகோதரன், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கடமையாற்றுகிறார். அவர் அண்மையில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகினார்.
இதையடுத்து அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த தகவல் கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட்டது.
கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் மாணவி பயில்வதால், கிளிநொச்சி வளாகம் உடனடியாக மூடப்பட்டது. கடந்த 8ஆம் திகதியே மாணவி கிளிநொச்சிக்கு வந்துள்ளார். கட்பஹாவிலிருந்து புகையிரதத்தில் வந்த மாணவி மதவாச்சியில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் கிளிநொச்சி வந்துள்ளார்.
அவர் விடுதி தனியறையில் தங்கியிருந்தபோதும், மாணவர்களுடன் இணைந்து கற்றல், பரீட்சை மண்டபத்தில் ஒன்றாக இருத்தல் மற்றும் சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்திய காரணத்தினால் அந்த வளாகத்தில் 320 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாணவியின் பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று மதியமளவில் வெளியாகும்.
மாணவர்கள் பல்கலைகழகத்திற்குள் நுழைவதோ, வெளியேறுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது.