உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில், துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஐவரில் நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை நேற்று (14) கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன விடுதலை செய்து உத்தரவிட்டார்.
குறித்த நால்வரும் பயங்கரவாத நடவடிக்கைகளுடனோ அல்லது அடிப்படைவாத செயற்பாடுகளுடனோ எந்த தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பது சிஐடி விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, நீதிவான் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட ஐவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிஐடியினர் கைது செய்து பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக் கவல் உத்தரவை பெற்றுக்கொண்ட நிலையில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
குறித்த ஐவரில் 2 ஆம் சந்தேக நபரான எம்.எல். ஷிஹான் அஹமட் தொடர்ந்தும் சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
‘பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றங்களை புரிந்ததாகவோ வேறு விடயங்களோ வெளிப்படுத்தப்படாமையால் அவர்களை விடுதலை செய்கிறேன்’ என நீதிவான் தனது உத்தரவில் கூறினார்.