ஸ்ரீ லங்காவில் அண்மையதினத்தில் கொவிட் தொற்றுக்குரியவர்கள் அதிகரித்து காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் கொவிட் 19 தொற்றுடன் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ராஜாங்கனை பகுதியின் 1 ஆம், 3 ஆம் மற்றும் 5 ஆம் பிரிவுகளில் வாழும் 12,000 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 532 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டின் தற்போதைய நிலைமையில் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் நேற்று (14) மாத்திரம் 320 பி.சி.ஆர்.பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் கொவிட் 19 தொற்றுடன் இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவர் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட பிரதேசத்தின் பல கடைகள் மூடப்பட்டு கடை உரிமையாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமையாற்றி சீகிரியா பகுதியில் வசிக்கும் இராணுவ வீரருடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் அதிகாரியும் அவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.