தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.
மன்னார் – பேசாலையில் இன்று இடம்பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான நிகழ்வு ஒன்றில் ஈரோஸ் பிரதிநிதிகள் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இ.சிறி இராஜராஜேந்திரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு,கிழக்கு,மலையகம் உட்பட இலங்கையின் சகல பாகங்களிலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் சர்வதேச நியமங்களுக்கேற்ப உரிமைகளைப் பெற்று சமாதானத்துடனும், சந்தோசமாகவும் வாழக்கூடிய வகையில் அவர்களது சிவில், அரசியல், மற்றும் பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளுடன் அனைவரது அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட உழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே மக்களால் அடையாளம் காணப்பட்ட பிரதான தமிழ் அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதனடிப்படையில் தமிழர் பிரதிநிதித்துவங்களை பாதுகாக்க தமிழ் பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்புவது தமிழ் பேசும் மக்களின் பொறுப்பாகும்.
இலங்கை நாடாளுமன்றம் இனவாத அடிப்படையிலே கட்டமைக்கப்பட்டிருப்பதால் அதன் முக்கிய அரசியல் தீர்மானங்களும் முடிவுகளும் இனவாத கட்டமைப்பை பலப்படுத்துவதையே உறுதி செய்யும்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தினால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் இதனையே உறுதி செய்துள்ளது.
தமிழ் இனத்தை அழிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், இராணுவத்திற்கான விசேட அதிகாரச்சட்டம், இராணுவத்திற்க்கான அதிக நிதி ஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டங்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும்.
தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் பெரும்பான்மை மக்களுக்கு சாதகமான திட்டங்களை வகுத்து செயல்படுவதுடன் எம் இனத்தை அழிப்பதற்க்கான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதனை எதிர்த்து அரசியல் முன்னெடுப்புக்களை நாடாளுமன்றத்திலோ சர்வதேசத்திலோ பேசக்கூடிய மக்களால் இனங்காணப்பட்ட சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.
விமர்சனங்களுக்கப்பால் அனைத்து தழிழ் தரப்புக்களும் விட்டுக்கொடுப்புக்களுடன் ஐக்கியமாவதுடன் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றினைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து அதனை பலப்படுத்துவதே இன்றைய தேவையாகவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் அமரர் தந்தை செல்வநாயகம் எமது தமிழ் தலமைகளின் ஒற்றுமையுடன் தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகவே 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழ் அரசுக்கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.
2001 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சுமார் 19 வருட காலத்திற்குள் தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து செயற்பட்ட முக்கிய பிரமுகர்களும் தனித்தனியே பிளவுபட்டு பிரிந்து சென்று கட்சிகள் அமைத்து செயல்படுகின்றனர்.
இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலவீனத்தையே காட்டுகின்றது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது செயற்பாடுகளை ஆரோக்கியமான விமர்சனத்திற்கு உட்படுத்தி அனைத்து தமிழ் தலைமைகளையும் உள்வாங்கி தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து தமிழ் தரப்புக்களும் இவ்வாறு பிளவுபட்டு செயற்படுவதனால் உரிய இலக்கிலிருந்து விடுபட்டு தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வை சீர்குலைத்த வரலாற்றுத் துரோகிகளாக கருதப்படுவார்கள்.
தமிழர் தலமைகளின் ஒற்றுமையை உணர்ந்து ஈழப்புரட்சி அமைப்பு ஈரோஸ் , தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற 04 பிரதான இயக்ககங்களும் ஒன்று சேர்ந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை 1984 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொண்டன.
இச்செயற்பாட்டினை எமது ஈரோஸ் இயக்கமே முன்னின்று செயற்படுத்தியது. இவ் ஈழ தேசிய விடுதலை முன்னணியானது தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு அறியவைப்பதற்கே உருவாக்கப்பட்டது.
அதே வேளை எமது ஈரோஸ் இயக்கமானது 1985, 1986 ஆம் ஆண்டு கால கட்டத்தில் போராட்ட இயக்கங்களிடையே மோதல்கள் ஏற்பட்ட வேளை மோதல்களை நிறுத்தி சமாதானமாக செல்ல வேண்டுமென அறிக்கை வெளியிட்டது.
2009 இல் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தேசியத்தின் குரல் நலிவடைந்து போய்விட எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் அப்போது தேசியத்தின் குரலாய் ஒலித்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே நாம் நமது ஆதரவினை வழங்கி வந்தோம்.
அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகளில் அவர்கள் பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களை நாம் அவ்வப்போது முன்வைப்பதற்கு என்றைக்கும் தயக்கம் காட்டியதில்லை.
எமது அமைப்பானது நடை பெறவிருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்குவதற்கான முடிவை எடுத்திருக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறித்த கலந்துரையாடலில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



















