கிளிநொச்சி உருத்திரபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் செருக்கன் பகுதியில் பின்புறமாக அமைக்கப்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத உப்பளத்தின் கட்டடங்களையே இடித்து அகற்றினோம் என கரைச்சி பிரதேசசபை தரப்பினரால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து கரைச்சி பிரதேச சபை தவிசாளர் தெரிவிக்கையில்,
கடந்த ஒருவருட காலமாக ஜீ.ஏ ரோசான்பீரிஸ் இலக்கம் 207, பழைய தங்காலை வீதி, அம்பாந்தோட்டையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவரால்
140 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட கடற்கரை ஓரம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி மற்றும் மதகுகள், நீர்த்தாங்கிகள், தங்குமடங்கள் நிர்மாணிக்கப்பட்டதுடன் 40 வரையான உப்பு பாத்திகள் உருவாக்கப்பட்டு மழை நீர் கடலுக்கு செல்லாத வகையில் தடுப்பு அணைகள் என்பனவும் பல கோடிகள் செலவில் நிர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பில் கிடைக்கப்பட்ட பொது அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், மக்கள் போன்றவர்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் களப்பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்ட போது,140 ஏக்கர்களுக்கான காணி ஆவணம் எதுவும் பெறப்படவில்லை, கட்டட அனுமதி பெறப்படவில்லை, சுற்றுச்சூழல் அதிகாரசபையின் சிபார்சு பெறப்படவில்லை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி பெறப்படவில்லை, காணி பயன்பாட்டுக் குழு அங்கிகாரம் பெறப்படவில்லை, கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனவள பாதுகாப்பு திணைக்கள அறிக்கைகள் சமர்ப்பிக்கப்ப்படவில்லை, அப்பகுதி பொது அமைப்புக்க்களின் ஒப்புதல்கள் எழுத்து மூலம் வழங்கப்படவில்லை என்பன தெரிய வந்துள்ளது.
மேற்படி விடயங்களை ஆராய்ந்த கரைச்சி பிரதேச சபையின் சட்ட விவகார குழு, சபையின் அங்கீகாரத்தை பெற்று பிரதேச சபை கட்டளைச்சட்டம் 51 ஆவது பிரிவின் கீழ் உள்ள தத்துவங்களின் அடிப்படையில் பல்வேறு தடவை பல்வேறு மாதங்களில் வழங்கப்பட்ட முன்னறிவித்தல்களின் பிரகாரம் நேற்றைய தினம் பொலிசார், கிராம அலுவலர், சமூக அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இடித்து அகற்றப்பட்டது.
இடித்தகற்றப்பட்ட நீர்த்தாங்கியானது உப்பள நிர்மாணத்திற்காக உருவாக்கப்பட்டதே தவிர மக்களின் நீர்த்தேவையை பூர்த்திசெய்ய உருவாக்கப்பட்டதல்ல. அவ்வாறான ஒரு மாயை சில விசமிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால் குறித்த செருக்கன் பகுதிக்கு கடந்த மூன்று வருடங்களாக எமது பிரதேச சபையாலே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.