அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,000 கடந்துள்ளது.
இதனையடுத்து நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவர அதிகாரிகள் தரப்பு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இதுவரை இல்லாத வேகம் எடுத்து இருக்கிறது. அங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக, வெள்ளிக்கிழமை 70 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
அங்கு கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று அங்கு 77 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலகளவில் ஒரு நாட்டில் ஒரே நாளில் இதுதான் கொரோனா தொற்றின் அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
வெள்ளிக்கிழமை மட்டும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி அமெரிக்காவில் 975 பேர் பலியாகினர். இதனால் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளதை அடுத்து, மொத்தம் 18 மாகாணங்களில் சிவப்பு மண்டல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாகாணங்களில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டுப்படுத்த முடியாத நிலை உருவானதே தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கும் முனைப்பில் தங்கள் அரசு செயல்பட்டு வருவதாக டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் தினந்தோறும் கூறி வந்தாலும்,
தடுப்பு மருந்து எப்போது மொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பதை அறுதியிட்டு கூற முடியாமல் உள்ளது.
இதனிடையே, கொரோனா தடுப்பு மருந்து இந்த ஆண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை என பலர் கருதுகின்றனர்.
மேலும், தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரும் நிலை ஆபத்தை ஏற்படுத்தலாம் என கூறும் பொதுமக்கள்,
தடுப்பு மருந்து தொடர்பில் சமீப காலமாக நம்பிக்கையை இழந்து வருகின்றனர். மட்டுமின்றி அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளப் போவதில்லை எனவும்,
31 சதவீதத்தினர் தடுப்பு மருந்து பயன்படுத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளாவிட்டால், தினந்தோறும் ஒரு லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.