இந்தியாவில் 7 மாத கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் கணவர், மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேந்தவர் சந்தீஷ்குமார். இவருக்கும் மனிஷா தேவி (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்த நிலையில் மனிஷா 7 மாத கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் மனிஷாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு துடித்தார். ஆனால் அடுத்தநாள் காலையில் தான் அவரை சந்தீஷ்குமார் மருத்துவரிடம் அழைத்து சென்றார்.
பின்னர் வீட்டுக்கு வந்த மனிஷா உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குள் சென்றார்.
மதியம் 12 மணியாகியும் அவர் கதவை திறக்காத நிலையில் சந்தீஷ்குமார் கதவை தட்டினார்.
ஆனாலும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது மனிஷா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினார்கள்.
இந்த நிலையில் மனிஷாவின் கணவர் மற்றும் குடும்பத்தார், கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் அதனால் தான் இந்த முடிவை எடுத்தார் எனவும் மனிஷாவின் தந்தை பொலிஸ் புகார் கொடுத்தார்.
புகாரை தொடர்ந்து சந்தீஷ்குமார் மற்றும் அவர் தாயார் தேவந்தி தேவி ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னர் இந்த சம்பவத்தில் மேலும் பல உண்மைகள் வெளியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















