வவுனியா வைரவப் புளியங்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வீதியில் அடிதடியில் ஈடுபட்டதுடன், கற்களினால் தாக்குதல்களும் மேற்கொண்டனர். இதில் வீதியால் சென்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் வவுனியா, வைரவப்புளியங்குளத்திலுள்ள மதுபான விடுதி முன்பாக இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வைரவப்புளியங்குளம், மதுபான விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் குழு ஒன்றுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் குறித்த இளைஞர்கள் தமக்குள் அடிபட்டுக் கொண்டு வீதிக்கு வந்தனர்.
மதுபானசாலைக்கு முன்பாக வீதியில் இளைஞர்கள் கைகலப்பில் ஈடுபட்டதுடன், கற்களை எடுத்தும் வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.
இதில் இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் வீதியில் சென்றவர்கள் மற்றும் வீதியில் நின்ற வாகனங்கள் மீதும் வீசப்பட்ட கற்கள் பட்டதாகவும் முச்சக்கர வண்டி ஒன்று இதனால் சேதமடைந்துள்ளதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், ஏனைய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















