ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சி என்றும் அந்த கட்சிக்கென கொள்கைகள் கிடையாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
கொத்மலை நவதிஸ்பன பகுதியில் இன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை அவர் கூறினார்.
அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம் என்றும் குறிப்பிட்ட அவர், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக தலைவர்கள் உள்ள கட்சி எனவும் குறிப்பிட்டார்.
சஜித்தை சிலர் தலைவர் என்கின்ற நிலையில், சிலர் சம்பிக்க தலைவர் என்கின்றதாகவும், அது உறுதியான தலைவர் ஒருவர் இல்லாத கட்சி எனவும் அவர் கூறினார்.
எனது தந்தை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியபோது புதிய கட்சியொன்றை உருவாக்கினார். ஆனால், சஜித் அணியினர் கட்சியொன்றை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு கொள்கை இல்லை, இரண்டாம் தலைமைத்துவமும் இல்லை.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல கட்சிகள் உருவாகலாம். அவற்றுக்கு ஆயுள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கமுடியாது. 50களில் பண்டார நாயக்க வெளியேறி சுதந்திரக்கட்சியை ஆரம்பித்ததாகவும், ஆரம்பத்தில் கை சின்னம் இருந்த நிலையில் அதன் பின்னர் கதிரை, வெற்றிலை என இன்று மொட்டு சின்னத்தில் வந்து நிற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதே நிலைமையை ஏற்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றதாகவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.