கடந்த நான்கரை வருடங்களாக இந்த நாட்டில் ஆட்சியில் இருந்த அரசு தமிழ் இளைஞர்கள் யுவதிகளை திரும்பிக் கூட பார்க்கவில்லை. இந்த ஆட்சியில் பங்காளிகளாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அரசின் வழியிலேயே சென்று எமது இளம் சமூகத்தை நிர்கதிக்குள் தள்ளியுள்ளனர் என கேடயச் சின்னத்தில் சுயேச்சைக் குழு 5 இல் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அரியநாயகம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பொது மக்கள் மத்தியில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது யாழ் மாவட்டத்தில் என்றுமில்லாத அளவுக்கு இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் காணப்படுகிறது. இவை அனைத்திற்கும் காரணம் அவர்களுக்கான தொழில் வாய்ப்பின்மையே. இளம் சமூத்திற்கான தொழில் வாய்ப்பினை கடந்த அரசும் அரசுக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்தியிருந்தால் தமிழ் இளைஞர் யுவதிகள் நிர்க்கதிக்குள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். எனத் தெரிவித்த ரஞ்சித்
கடந்த நான்கரை வருடங்களில் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் ஏராளமான தென்னிலங்களை இளைஞர் யுவதிகள் புதிய புதிய தொழில் வாய்ப்புக்களை பெற்று இங்கு பணியாற்றி வருகின்றனர். இவை அனைத்தும் எங்களது இளைஞர் யுவதிகளுக்கு கிடைக்ககூடிய வாய்ப்பு. அதனை அவர்கள் பெற்றுள்ளனர். இதனை அரசுக்கு ஆதரவு கொடுத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் தடுத்து நிறுத்தவில்லை.
மேலும் இக் காலப்பகுதியில் அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் கூட எமது மாவட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை கண்டுகொள்ளவில்லை. அனால் இப்போது தேர்தல் மேடைகளிலும் அறிக்கைகளிலும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உழைப்பதாக தெரிவித்து வருகின்றனர். இது நகைப்பிற்குரியது அதிகாரத்தில் பதவியிலிருக்கும் போது திரும்பி பார்க்காதவர்கள் எதிர்காலத்தில் செய்வார்கள் என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது.


















