தென்னிலங்கையில் இனவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கும் ராஜபக்சவின் கட்சியை தமிழ் முஸ்லிம் மக்கள் நிராகரிப்பதோடு சிறுபான்மை மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜேம்ஸ் பிரமிளஸ் கொஸ்தா தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று புதன் கிழமை (22) காலை 10 மணியளவில் நடை பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களின் பிரச்சனை, சரணடைந்தவர்களுடைய பிரச்சனை, சிறையில் வாடும் இளைஞர்களின் பிரச்சனை என்று தமிழ் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சி செய்தவர் மஹிந்த ராஜபக்ச என்ற வகையில் அவருடைய ஆட்சியை ஏற்படுத்த தென்னிலங்கையிலே இனவாத சக்திகள் கங்கனம் கட்டிக் கொண்டு நிற்பதை ஊடகங்கள் ஊடாக அறிய முடிகிறது.
எனவே வன்னி மாவட்ட மக்களே இந்த நாட்டில் தலை தூக்கியுள்ள இனவாத சக்திகளை முறியடிக்கக் கூடிய ஒரே பலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் தான் இருக்கிறது.என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாக கூறுகின்றோம்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களது காலத்திலே வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன.
தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தமிழர்களுக்கே வழங்கப்பட்டது. அதே போல் 20 ஆயிரம் வீடுகள் தமிழ் மக்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டது.
அவரது ஆட்சியில் தமிழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. தமிழர்களுடைய நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பு வரைபை ரணில் விக்ரம சிங்க உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தயாரித்தார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்சவினுடைய இனவாத சக்திகள் அந்த வரைபை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர முடியாமல் தடுத்தார்கள்.
அப்படியான ஒரு இனவாத சக்தியை எந்த காரணம் கொண்டும் தமிழ் முஸ்லிம் மக்கள் வன்னி மாவட்டத்தில் ஆதரிக்க வேண்டாம் என்பதை மிகவும் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ஜேம்ஸ் பிரமிளஸ் கொஸ்தா மேலும் தெரிவித்தார்.
இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும், வேட்பாளருமான அப்துல் சமீயு முஹம்மது பஸ்மி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















